தன் மகன் கசனுக்காக நலம் வழங்கும் நாராயணரை நோக்கி குரு பகவான், தவம் செய்த சிறப்பு மிக்க தலம் தான் சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலாகும். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறையில் அமைந்துள்ளது இக்கோவில், சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருத்தலத்தில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். இக்கோவில் வரலாறானது குரு பகவான் தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் தவம் மேற்கொண்டு வந்தார் அப்போது குருவின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்த தேரில் வந்து குரு பகவானுக்கு காட்சியளித்து அவர் மகனை மீட்டுத் தந்தார். இதனால் இத்திருத்தலத்தின் எழுந்தருளிய பெருமாள், சித்திர ரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள பெருமாள் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக வீற்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதனால் இக்கோவிலில் அவருக்கு அபிஷேகம் கிடையாது. இந்ததிருத்தலத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.மூலவரான சித்திர ரத வல்லப பெருமாள் சுமார்10 அடி உயரத்தில் கம்பீரமாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இப்பெருமாளை வணங்கினால் குருபகவானின் அருள் தானே வந்தடையும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை மேலும் குழந்தை பாக்கியமும், சகல நன்மைகளையும் கிடைக்கப்பெறும் என்றும் நம்புகின்றனர். இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் நாச்சியார்களுடன் உற்சவ மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.குரு பகவானே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதனால், குருதோஷம் உள்ளவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு பரிகாரம் மேற்கொண்டால் தோஷம் நிவர்த்தியாகி பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். குருவிற்கு நன்மையளித்த பெருமாளே இங்கு கோவில் கொண்டுள்ளதால், அப்பெருமாளை வணங்கினாலே குரு பகவானின் அனுக்கிரகம் கிடைக்கப்பெறும் என்பது இத்திருத்தலத்திற்கு நாடி வரும் பக்தர்களின் நம்பிக்கை.