திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7வது நாள் பிரமோற்சவ விழாவில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று 7 குதிரையில் சூரியனுக்கு ரத சாரதியாக அருணன் இருக்க கிரகங்களுக்கு அதிபதியான சூரிய பிரபையில் தசாவதாரம் பெருமாளாக எழுந்தருளி மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்தார்.
அப்போது சிவப்பு மாலை, பவளம், முத்து, வைரம் நகைகளால் அலங்கரித்து கையில் சங்கு, சக்கரம், வில், அம்பு, புல்லாங்குழலுடன் சுவாமி காட்சியளித்தார். சூரிய பகவானின் பிரத்தி ரூபம் தானே எனும் விதமாக நேற்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். அப்போது பல ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து, இரவு வெள்ளை நிற ஆடையில் மாலை அணிந்து சந்திரபிரபை வாகனத்தின் மீது மலையப்ப சுவாமி கிருஷ்ணராக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் தொடர்ச்சியாக, இன்று காலை தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நாளை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.