ரயில் விபத்துகளில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு, 50,000 ரூபாய். படுகாயம் அடைந்தோருக்கு, 25,000 ரூபாய். லேசான காயம் அடைந்தோருக்கு, 5,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த நிவாரண தொகைகளை 10 மடங்கு அதிகரித்து, ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துஉள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஆளில்லா லெவல் கிராசிங் உள்ளிட்ட ரயில் விபத்துகளில் உயிரிழப்பவரின் குடும்பத்திற்கு இனி 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இதே போல், படுகாயம் அடைந்தோருக்கு, 2.5 லட்சம் ரூபாய். லேசான காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
மேலும், ரயிலில் பயங்கரவாத தாக்குதல், வன்முறை, கொள்ளை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களால் உயிரிழக்கும் நபரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீடும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, விரும்பத்தகாத சம்பவங்களால் உயிரிழக்கும் நபரின் குடும்பத்திற்கு, 1.5 லட்சம் ரூபாய். படுகாயம் அடைந்தோருக்கு, 50,000 ரூபாய் வழங்கப்படும்.
ரயில் விபத்துகள் ஏற்பட்டால் 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிக்கு, ஒவ்வொரு 10 நாட்கள் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தினத்திற்கு முன் வரை ஒவ்வொரு நாளும் 3,000 ரூபாய் வழங்கப்படும்.
அதே சமயம், ஆளில்லா லெவல் கிராசிங்கில் அத்துமீறி நுழைந்து விபத்துக்குள்ளானால்எந்தவிதமான கருணைத் தொகையும் வழங்கப்படாது.