வடக்கு வாழ்கிறது, வளருகிறது…

தெற்கு தேய்கிறது, தேயும் தெற்கில் இவர்களோ மேய்கிறார்கள்…’

என்று பேரறிஞர் அண்ணா சொன்னது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இனி நடைபெறவிருக்கும் 2026க்குப் பிறகான தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு கனகச்சிதமாகப் பொருந்தப்போகிறது.

மக்கள்தொகை அடிப்படையில் 2026ம் ஆண்டுக்குப் பிறகு, மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்றும், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கார்னெகி மையம் (Carnegie Report) ஓர் அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், கார்னெகி மையம் (Carnegie Report) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், தென்னிந்திய மாநிலங்களைவிட வடஇந்திய மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி என்பது மிகவும் வேகமாக இருக்கிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்பதால், ஒப்பீட்டளவில் வடஇந்திய மாநிலங்களில் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அதேசமயம் மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் கணிசமாகக் குறையும்.

அதாவது, இப்போது இருக்கும் தொகுதிகளில் பெரும் இழப்பு நேரிடும் என அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 2026க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் செய்யப்படும் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறையில், வட மாநிலங்கள் கூடுதலான தொகுதிகளைப் பெறும்.

குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது 80 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன.

ஆனால், தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் கூடுதலாக 11 தொகுதிகளைப் பெற்று, உ.பி.,யின் மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 91்ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் இப்போது இருக்கும் தொகுதிகளைவிடக் கூடுதலாக பீகார் மாநிலம் 10 தொகுதிகளையும், ராஜஸ்தான் மாநிலம் 6 தொகுதிகளையும், மத்தியப் பிரதேசம் 4 தொகுதிகளையும் பெறும்.

அதேபோல குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், டெல்லி (யூனியன் பிரதேசம்), சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களும் தலா 1 மக்களவைத் தொகுதியை அதிகமாகப் பெறும்” என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அதேசமயம், நாம் இருவர் நமக்கு இருவர் என மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை பொறுப்புணர்வுடன் செயல்படுத்திய தென் மாநிலங்கள், அந்தப் பொறுப்புணர்வுக்காகவே தண்டிக்கப்படவிருக்கின்றன.

அதாவது, இருக்கும் தொகுதிகளையும் கணிசமாக இழக்கப்போகின்றன.

குறிப்பாக, தமிழ்நாடு மாநிலம் தற்போது 39 மக்களவைத் தொகுதிகளை வைத்திருக்கிறது.

ஆனால், 2026க்குப் பிறகான மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பால் கிட்டத்தட்ட 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும்.

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 31 ஆகக் குறையும்.

தமிழ்நாட்டைப் போலவே இதர தென் மாநிலங்களான கேரளா இப்போதிருக்கும் 20 தொகுதிகளில் 8 தொகுதிகளை இழந்து 12் ஆகச் சுருங்கும்.

ஆந்திரா – தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், அவை 34-ஆகக் குறையும்.

கர்நாடகாவும் தற்போதைய 28லிருந்து 2 இடங்களை இழந்து 26 இடங்களாகச் சுருங்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது என்று கார்னெகி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.