தமிழக காவல்துறையில் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களால் இடமாறுதல், விடுமுறை கேட்டு விண்ணப்பித்தும் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் ஒரு தற்கொலை நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வாரம் ஒரு நாள் போலீசாருக்கு ஓய்வு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. திருவிழா, வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு சமயங்களில் சூழ்நிலை பொறுத்து ஓய்வு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை மட்டும் ‘வேத வாக்காக’ எடுத்துக்கொண்டு போலீசாருக்கு ஓய்வு அளிக்க அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை. போராடிதான் வாங்க வேண்டியுள்ளது. இதற்கு அதிகாரிகளும் விதிவிலக்கல்ல.

கோவை டி.ஐ.ஜி.,யாக இருந்த விஜயகுமார், கடந்த ஜூலை 7 ல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மனஅழுத்தத்தால் இம்முடிவை அவர் எடுத்ததாக அதிகாரிகள் கூறிய நிலையில், ‘6 மாதமாக அவருக்கு விடுமுறை கொடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமே தற்கொலைக்கு காரணம்’ என நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.

தேனியில் நடந்த விஜயகுமாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற டி.ஜி.பி., சங்கர் ஜிவால், மதுரையில் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, போலீஸ் முதல் அதிகாரிகள் வரை விடுமுறை கேட்டால் உடனடியாக அனுமதிக்கும்படி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து இடமாறுதல், விடுமுறை கேட்போரிடம் இருந்து விருப்பமனு பெறப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம் அரசியல் செல்வாக்கால் சிலர் மட்டும் இடமாறுதல் பெற்று வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், ”இந்தாண்டில் இதுவரை போலீசார் முதல் அதிகாரிகள் வரை 30 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விடுமுறை, இடமாறுதல் கிடைக்காமைதான் முக்கிய காரணம். எங்களிடம் விருப்ப மனு பெற்று 3 மாதங்களாகிவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பழைய இடத்திலேயே அதே மனஅழுத்தத்துடன் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையொட்டி சில மாதங்களில் தமிழக அளவில் பெரிய அளவில் இடமாறுதல் நடக்கும். அப்போது விருப்ப மனு கொடுத்தவர்கள் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாற்றப்படுவர்” என்றார்.