சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்த, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை அடிப்படையில், விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கை மனுவை, சி.பி.ஐ., பரிசீலிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையை முடித்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ‘தினமலர்’நாளிதழின் வேலுார் மற்றும் திருச்சி பதிப்புகளின் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில், அமைச்சர்கள், மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், செயலர்களின் தொடர்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சி.பி.ஐ., போன்ற ஏஜன்சியால் மட்டுமே, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த முடியும்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ”இந்த விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை,” என்றார்.
இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், மனுதாரரின் மனுவை பரிசீலித்து, தகுதி அடிப்படையில் முடிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்து வைத்தது.