விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். படமும் வைத்துக்கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும்.
விநாயகரின் திரு மேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும். விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தூப, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை வீட்டில் எத்தனை நாட்கள் வைத்து இருக்கிறீர்களோ, அதுவரை தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். அன்று மாலையில் சந்திரனை பார்த்தல் கூடாது. ஆனால், விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.