முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.
எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.
விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.
அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.
பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.