சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 66, பதவியேற்றார். தேர்தலில் தர்மனுக்கு 76 சதவீத சிங்கப்பூர் மக்கள் ஓட்டளித்திருந்தனர்.
சமீபத்தில் சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 66, சீன வம்சாவளிகளான இங் கொக் செங் 76, டான் கின் லியான் 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது.
ஆனால் தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் 76 சதவீத வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்வாகி இன்று (செப்.,14) பதவியேற்றார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் கடந்த 2001-ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர் பிரதமரின் ஆலோசகர் நிதியமைச்சர் கல்வி அமைச்சர் துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்தார்.