பிக்பாஸ் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “வா வரலாம் வா”.
எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி. ரவிசந்தர் – எஸ்பிஆர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக “மைம்” கோபி நடித்துள்ளனர். 40 குழந்தைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தேனிசை தென்றல் தேவா இசையமைக்க, காதல் மதி, எஸ்பிஆர், கானா எட்வின் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ராஜா முகமது எடிட்டிங் செய்துள்ளார்.
இந்நிலையில், வா வரலாம் வா திரைப்படத்தின் First Look வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ‘அம்மா டாக்கீஸ்’ ஸ்டுடியோவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், இப்படத்தின் கதாநாயகன் பாலாஜி முருகதாஸ், கதாநாயகி மஹானா சஞ்சீவி மற்றும் படத்தின் இயக்குநர்கள் எல்.ஜி. ரவிசந்தர் – எஸ்.பி.ஆர், படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா, இயக்குநர் சரவண சுப்பையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வெளியாகியுள்ள இந்த First Look போஸ்டரில் பாலாஜி முருகதாஸ் உடன், ரெடின் கிங்ஸ்லீ இணைந்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும், பாலாஜி முருகதாஸ் பார்ப்பதற்கே வண்ணமயமான லுக்கில் ஸ்டைலாக இருக்கிறார். படத்தின் தலைப்பு அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்துள்ளது.