கும்மிடிப்பூண்டி அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியில் ஏறி, செல்ஃபி எடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்னஓ புளாபுரம் பகுதியில் தனியார் பிளைவுட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ்குமார்(18), நேற்று முன்தினம், சென்னை- சூளூர்பேட்டை ரயில்வே மார்க்கத்தில், சின்ன ஓபுளாபுரம் பகுதியில் உள்ள ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் பெட்டியின் மீது ஏறி, மொபைல் போனில் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அம்ரேஷ்குமார், கையை மேலே தூக்கி செல்ஃபி புகைப்படம் எடுத்தபோது, ரயில் பாதையின் மேலே சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டார்.
இதில், உடலின் பல பகுதிகளில் காயமடைந்த அம்ரேஷ்குமார், 40 சதவீத காயங்களுடன் சென்னை- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சென்னை – கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.