
வையத்தலைமை கொள்ளும் பாரதம் ‘ஜி – 20’ மாநாட்டின் தலைமைக்கான கருப்பொருளாக முன்வைப்பது, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற வாசகத்தை.
இதன் பொருள், – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான, உலகளாவிய செயல் திட்டத்தை முன்னெடுக்கும் நம் பாரதத்தின் முயற்சி, ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தலைவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இந்த மாநாடு துவங்கப்படும் வேளையில், இந்தியாவை உலகத்தின் தலைமைக்கு உயர்த்தி இருக்கும் பிரதமர் மோடியின் பெருமைகளையும், சாதனைகளையும் போற்றி நடக்கும் பாதயாத்திரையில், கம்பம், போடிநாயக்கனுார் பகுதிக்கு வந்திருக்கிறோம்.
கேரள குப்பை மேடு
கம்பராய பெருமாள் கோவில் இருக்கும் கம்பத்தில், சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆனைமலையன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, புதுப்பட்டி, கம்பம் ஆகிய பகுதிகளில், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில், பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கம்பம் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீட்டை, மத்திய அரசு வழங்கியுள்ளது. இப்படிப்பட்ட செழிப்பான பூமியை, ஒரு குப்பை மேடாக ஆக்குகிறது கேரளா. அதைத் தட்டிக் கேட்க தெம்பில்லாது, கைகட்டி வேடிக்கை பார்க்கும் முதல்வர் தான் ஸ்டாலின்.
‘ஓட்டு தரும் கூட்டணிதான் முக்கியம், நாட்டு மக்கள் எக்கேடு கெட்டால் என்ன…’ என்கிற மனநிலையில், முதல்வர் கண்களுக்கு முன்தான், கேரள குப்பையை கம்பத்தில் கொட்டப்படுகின்றன.
தென் மாவட்டங்கள் வஞ்சிப்பு
அச்சன்கோவில் – பம்பா — வைப்பாறு நதி நீர் இணைப்பு திட்டம் நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு வரும் திட்டம்.
மேற்கு தொடர்ச்சி மலையில், மேற்கு நோக்கி ஓடி, கடலில் கலக்கும் அச்சன்கோவில் மற்றும் பம்பா நதிகளின் உபரி நீரில், 20 சதவீதத்தை, மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு அடிவாரத்தில், செங்கோட்டையை அடுத்துள்ள மேக்கரைக்கு கொண்டு வந்து, வைப்பாறுக்கு திருப்புவது தான் இத்திட்டம்.
தேனி மாவட்டம், வருசநாடு மலையில் இருந்து வைப்பாறு நதி உருவாகிறது. ஆனால், வைப்பாறு நதியில் உபரி நீர் கலப்பதை கூட, விரும்பாத கேரளா அரசிடம் சமரசம் பேச, தமிழக முதல்வர் எடுத்த முயற்சிகள் என்ன?
இத்திட்டம் நடைமுறைப்பட்டால், ஆண்டிற்கு 1,114 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கவும் வாய்ப்பு ஏற்படும். சென்னை அரண்மனையில் இருக்கும் உங்களுக்கு, தென் மாவட்ட விவசாய மக்களின் வலி தெரியுமா?
கேரள மக்கள், ‘கஞ்சா போதை எனில், அது கம்பம் கஞ்சா தான்’ என்று சொல்லும் அளவுக்கு, இங்கு கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை ஆகிறது. இது, அரசுக்கும், இந்த ஊர் எம்.எல்.ஏ.,வுக்கும் தெரியாமலா நடக்கிறது?
ஏலக்காய் நகரம்
போடி நாயக்கனுார்… ‘க்வீன் ஆப் ஸ்பைசஸ்’ என்று அழைக்கப்படும் ஏலக்காய், இங்கு பெருவாரியாக வளர்க்கப்படுகின்றன.
ஆண்டுக்கு, 40,000 டன் ஏலக்காய், போடியில் விளைவித்து, நம்முடைய மாநிலம், வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் என, பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. அதனால் தான் போடிநாயக்கனுார், ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது.
போடி மக்களின், 50 ஆண்டு கனவை நிறைவேற்றியவர் மோடி. ஜூன் 15, 2023ல், சென்னை – போடி ரயில் சேவை துவங்கப்பட்டது
போடி- — தேனி – -உசிலம்பட்டி நான்கு வழிச்சாலைக்கு மட்டும், 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
போடி அருகில் சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக, 1,000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்ட, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது
சொன்னீர்களே என்ன ஆச்சு?
தி.மு.க., நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள்:
தேனியில் திராட்சைப் பழங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை அமைக்கப்படும்
தேனியில் முருங்கைக்காய் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
குமுளியில் இருந்து கண்ணகி கோவிலுக்குத் தார்ச் சாலை அமைக்கப்படும்
கூசுப்புலாபுரம், ஆண்டிபட்டியில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்
போடிநாயக்கனுாரில் மாம்பழக் கூழ் தயாரிக்க தொழிற்சாலை அமைக்கப்படும்
ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
சுழன்று வரும் சூறாவளியோ, மழையோ, வெயிலோ எதுவாக இருப்பினும், சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படாமல், நாட்டின் சூழலை மட்டும் மனதில் நினைத்து, பாதயாத்திரையில் சூழ்கிறது மக்கள் கூட்டம்.
பாதயாத்திரையை பற்றி பரிகாசம் செய்தவர்கள், இப்போது பதற்றப்படுகின்றனர்.
அதனால்தான் பல நேரங்களில், பாதயாத்திரை செல்லும் தெருக்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. உங்களால் நிறுத்த முடிந்தது மக்களை அல்ல; மின்சாரத்தை மட்டும் தான்.
உங்கள் தொடர் மின்சார தடையால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயியின் மகனாக, இன்று மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் எனக்கு, செயற்கை மின் தடையால் சிக்கல் இல்லை.
உண்மையான, ‘பவர் கட்’ ஆகப்போவது, இனி தி.மு.க.,விற்குதான்.
பயணம் தொடரும்….