சிட்லபாக்கம் 43-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை முறையாக தரம் பிரித்து, குப்பை சேகரிக்கும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுத்து வருகின்றனர். இதனால் பணியாளர்களின் பணிசுமையும் குறைகின்றது. இவ்வாறு பிரித்து கொடுப்பதில் முன்மாதிரியாக திகழ்ந்த 3 நபர்கள், அன்னை தெரேசா தெருவை சேர்ந்த சசிகலா, கஸ்தூரிபாய் தெரு அஷ்வதா அப்பார்ட்மென்ட் குடியிருப்பை சேர்ந்த அமுதா மற்றும் சின்னத்தாய் அவர்களை அந்த பகுதியின் சுகாதார கண்கானிப்பாளர் கார்மேகம் தேர்வு செய்தார். அவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சால்வை அணிவித்து பாராட்டினார். சுகாதார அதிகாரி நாகராஜ் இயற்கை உரம் மற்றும் பூச்செடிகளை வழங்கினார். இம்மாதிரியான நிகழ்வுகளை பார்த்து பொது மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். அது மட்டுமின்றி குப்பைகளை பிரித்துக் கொடுக்கும் முக்கியத்துவம் இதன் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.