தி.மு.க., அரசை கலைக்க நடவடிக்கை எடுப்பேன் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என சமீபத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி பேசியது, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் கருத்து இந்து மதத்தினரை படுகொலை செய்ய வேண்டும் என பேசும்படி உள்ளதாக பா.ஜ.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது சனாதன தர்மத்தின் மீது முட்டாள்தனமான, தேசவிரோதத் தாக்குதல் நடத்துவது என்பது சரியானதல்ல.
முதல்வர் ஸ்டாலினின் வாரிசும் அமைச்சராக இருப்பவருமான உதயநிதி மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இன்னொரு முறை அவர் சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் பேசினால், தமிழக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்குவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி சனாதன சர்ச்சை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தமிழக கவர்னருக்கு ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.