துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனமிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கோவை பாரதியார் பல்கலை, கல்வியியல் பல்கலையில் ஓராண்டு காலமாக துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அண்மையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியும் காலியானது. ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில், யுஜிசி குழு பிரதிநிதியை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிபந்தனையால் துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதத்தை பரிசீலித்த அரசு, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ஆளுநரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், மாநில பல்கலை.க்கு துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதியின்படி யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி விதிமுறைகள் உட்பட பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளது.