இன்று அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட தினம்.
அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும்.

1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம்
1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4, இல்,
“பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” என உருவாக்கப்பட்டது.
பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து ‘பேரறிஞர்’ மற்றும் ‘தொழில்நுட்ப’ ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு “அண்ணா பல்கலைக்கழகம் ” என்று பெயர் மாற்றப்பட்டது. ஏனிந்த பெயர் மாற்றம்?
அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பழைய நினைவு என் நெஞ்சை நெருடியது. சட்ட சபையின் செய்தியாளர் மாடத்தில் நான் அமர்ந்திருந்து கவனித்த காட்சி மனக் கண் முன் நிழலாடியது.
அண்ணா பல்கலைக்கழகத்தை முதன்முதலில் தொடங்கிய போது அதற்குப் பெயர், “பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” என்பதாகும்.
இந்த பல்கலைக் கழகத்திற்கு அங்கீகார அனுமதியை வழங்குவதற்காகப் பல்கலைக்கழக நல்கைக் குழுவின் ஆய்வாளர்கள் சென்னைக்கு வந்து ஆய்வு செய்தனர்.
“பேரறிஞர் அண்ணா என்றால் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள்.
‘பேரறிஞர்’ என்பது சிறப்புப் பட்டம்.”திராவிட இயக்கத்தின் முக்கியமான முதுபெரும் தலைவர் அண்ணா” என்று தெரிவிக்கப்பட்ட து. உடனே பல்கலைக்கழக நல்கை குழுவின் அறிஞர் ஒருவர் இப்படி கேட்டார்: “பேரறிஞர் என்றால் என்ன?
” தி கிரேட்டஸ்ட் ஸ்காலர்” என்று பெயர் என பதில் சொல்லப்பட்டது.
இதை அந்த ஆய்வாளர் ஏற்கவில்லை.
“இந்த பெயரை மாற்றுங்கள். அப்பொழுது தான் உங்களுக்கான பல்கலைக்கழக நல்கை குழுவின் அனுமதி தரப்படும்” என்று தெரிவித்து விட்டார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் பெயரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அந்த காலத்தில் உயர் கல்வியும் பள்ளிக் கல்வியும் ஒரே அமைச்சகமாக இருந்தது.
அதற்கு அரங்கநாயகம் கல்வி அமைச்சர். அவர் தான், “பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” என்ற பெயருக்கான மசோதாவைச் சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றினார். பின்னரும் அந்த பெயரை மாற்றுவதற்கான மசோதாவையும் அவர்தான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்படி தாக்கல் செய்யும் பொழுது அவர் ‘பேரறிஞர்’ என்ற பெயரை எடுத்துவிட்டு ‘அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்’ என்று மட்டுமே தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. இத்தகைய மசோதாவை தாக்கல் செய்யும் பொழுது கலைஞருடைய கேள்விகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற ஒரு சிக்கல் வந்தது. அது தொடர்பாக அரங்கநாயகம், அப்போதைய முதலமைச்சர் எம் ஜி ஆருடன் கலந்து பேசினார். அதன்படி ஒரு தீர்மானத்திற்கு வந்தவர்களாக அந்த பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றுவதற்குரிய மசோதாவைத் தாக்கல் செய்ய முனைந்தனர்.
சர்ச்சைகள் எழுந்தபோது அரங்கநாயகம் இந்த பெயர் மாற்றத்திற்கான காரணத்தை இப்படிச் சொன்னார்:
” பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” என்றுதான் நாங்கள் பெயர் வைத்திருந்தோம். ஆனால் இதில் ஒரு சிரமம் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் பேரறிஞர் என்பதற்குப் P, அண்ணா என்பதற்கு A யுனிவர்சிட்டி என்பதற்கு U, டெக்னாலஜி என்பதற்கு T என வைத்து PAUT எனவாக்கி, ‘பாட்’ என்றே உச்சரித்துவருகின்றனர்.இதனால் நாங்கள் எண்ணிய நோக்கம் நிறைவேறவில்லை. எனவே ‘பேரறிஞர் அண்ணா’ என்பதை ‘அண்ணா’ என்று சுருக்கி, “அண்ணா பல்கலைக்கழகம்’ என்று பெயர் வைத்தால் நிச்சயமாக அனைவரும் ‘அண்ணா’ என்ற பெயரை உச்சரிப்பார்கள். இந்த நோக்கத்திற்காகத் தான் பெயர் மாற்றம் செய்து இருக்கிறோம். ஆகவே இதற்கான மசோதாவை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அரங்க நாயகம் கேட்டுக் கொண்டார்.
‘பேரறிஞர்’ என்ற பெயர் எடுத்துவிட்டால் திமுக தரப்பில் இருந்து கடுமையான ஆட்சேபம் வரும் என்ற காரணத்தால், மிக லாவகமான விளக்கத்தின் மூலம் எதிர்க்கட்சிகளைச் சரிக் கட்டிய அந்த தந்திரத்தின் பின்னணியில் முதல்வர் எம்ஜிஆரின் மூளையும் இருந்தது.

நூருல்லா ஆர் ஊடகன் 17-09-2020. 9655578786