
பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியவற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவார்கள். அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை,சமயோசித புத்தி ஆகியவற்றின் வடிவான கிருஷ்ணனை வழிபட்டு, அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே கோகுலாஷ்டமியின் சிறப்பு.
இதனை “ஸ்ரீ ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராச லீலா, தகிஅண்டி ” என பல பெயர்களில், பல வடிவங்களில் மகிழ்கின்றனர்.
கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திரத்தில் ஸ்ரீ கண்ணனாக அவதரித்த தினத்தை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவது வழக்கம். பகவான் கிருஷ்ணர் அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாகும்.
அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பர். வாசலில் தொடங்கி பூஜை அரை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
குறிப்பாக கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது. ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி,நவமி ஆகிய இரண்டு திதிகளும் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எவ்விதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பது வழக்கமாக உள்ளது. மற்ற திதிகளை போலவே இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில் மகா விஷ்ணு, நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீ ராமநவமி என்று வருகிறோம்.