சென்னை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட, 15 மாவட்டங்களை, மிதமான நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளாக, மத்திய அரசு வரையறுத்துள்ளது. இப்பகுதிகளில், ‘கான்கிரீட்’ கட்டுமான பணிகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என, இந்திய தர நிர்ணய அமைப்பு பரிந்துரைத்து உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்புகள் தான் பிரதானமாக உள்ளன. 2004ல் சுனாமி ஏற்பட்ட பின், நிலநடுக்கம் தொடர்பான விஷயங்களில், கட்டுமான துறையினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். நாட்டில், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் மட்டுமே, நிலநடுக்கம் பெரிய அளவில் ஏற்படும் என்ற கருத்து நிலவுகிறது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் அடிப்படையில், இக்கருத்து உருவாகியுள்ளது. இதில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், மிக குறைவான நிலநடுக்கத்திற்கு வாய்ப்புள்ள பகுதியாக வரையறுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மத்திய அரசின் கட்டுமான பொருட்கள் தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சிலான, பி.எம்.டி.சி., சமீபத்தில் நிலநடுக்க அபாய பகுதிகள் தொடர்பான, புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், தர்மபுரி, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன. இப்பகுதிகளில், ரிக்டர் அளவுகோலில், 3.௦ வரை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.