திருவண்ணாமலையில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி இன்று வருகிறது. அதன்படி நேற்று காலை 10.58 மணிக்கு கிரிவலம் தொடங்கி இன்று காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி லட்சக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் திருவண்ணாமலையில் நேற்று கிரிவலம் மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் நள்ளிரவில் மழை பெய்து வந்த நிலையில், நேற்றும் அங்கு 10 மணியளவில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து மழையில் நனைந்தபடி பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் மேற்கொண்டனர். சிலர் குடைகளைப் பிடித்தவாறும், ரெயின் கோட் அணிந்தவாறும் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.