தேர்தல் அரசியலில் பெண்களின் ஓட்டு முக்கியமானது.
பெண்கள் ஆதரவு எந்த கட்சிக்கு அதிகமாக உள்ளதோ அந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று.
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் அவருக்கு என தனியாக பெண்கள் ஆதரவு இருந்தது எல்லோருக்கும் தெரியும்.
அந்த ஆதரவை தக்க வைத்துக்கொள்ள அதிமுக தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வந்தது.
அதன் எதிரொலியாகவே அவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வழங்கினார்கள். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவும் பெண்களுக்காகவே புதுப்புது திட்டங்களை உருவாக்கி ஆதரவை பெற்று வருகிறது. பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, தற்போது குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ரூபாய் ஆயிரம் என அடுக்கடுக்காக திட்டங்களை அறிவித்து பெண்கள் ஆதரவை மேலும் மேலும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 400 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை மாற்றாமல் வைத்திருந்த மத்திய அரசு திடிர் என சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது. அதுவும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 400 ரூபாய் மானியம் என்றும் அறிவித்துள்ளனர்.
ரக்ஷா பந்தன் திருநாளில் சகோதரிகளுக்கு அன்பு பரிசு என்று பிரதமர் மோடி அறிவிப்பது போல் விளம்பரமும் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது.
நாங்கள் மூன்றாவது கூட்டம் நடத்த இருக்கும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து செப்டம்பர் 15ஆம் தேதி தான் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதியாக அறிவித்து அதை நிறைவேற்றுவதற்காக ராகுல் காந்தி கர்நாடகத்துக்கு சென்று விட்டார்.
கர்நாடகத்தில் பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான் மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்து அறிவித்துள்ளதும் கவனிக்க தக்க விஷயமாகும்.
எப்படியோ பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் கூட வரலாம் என்று எதிர்க்கட்சிகள் ஆருடம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற போட்டா போட்டி அறிவிப்புகளால் பொதுமக்களுக்கு பலன் கிடைத்தால் சரிதான்.