கேரளாவில் கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற தவவலிமையால் மூவுலகையும் ஆளும் மன்னனாகத் திகழ்ந்தான். இதனைப் பொறுக்காத தேவர்கள் அசுர வலிமை கொண்ட மகாபலியை அடக்கித் தங்களின் வலிமைக்குக் கொண்டுவரத் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். திருமாலின் சூட்சமத்தை அறிந்த அசுர குருவான சுக்ராச்சாயான் அறிவுரையைக் கேளாத மகாபலியும் மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தார். திருமால் விசுவரூபம் எடுத்து வானத்தை ஒரு அடியாகவும், பூமியை மற்றொரு அடியாகவும் வைத்து அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்தார். வாமன மூர்த்தியால் மகாபலிச் சக்கரவர்த்தி பாதாளத்துள் வீழ்த்தப்பட்டபோது, தான் ஆட்சி செலுத்திய நாட்டை ஆண்டுக்கொரு முறை வந்து கண்ணுற்று மகிழத் திருமாலிடம் வரம் வேண்டினார். பிறகு திருமாலும் மகாபலியை ஆட்கொண்டு வரம் நல்கினார். இவ்வாறு மகாபலிச் சக்கரவர்தியின் நினைவு நாளாகவும், மகாபலி மன்னன் இந்த திருவோண நன்னாளில் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும், அவனை வரவேற்கும் முகமாகவும் இவ்வோணம் பண்டிகை கொண்டாடப் பெறுவதாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் வாயிற் படியிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்களைப் பெண்கள் வரைகின்றனர். கோலத்தின் நடுவில் குத்துவிளக்கேற்றி வைத்து, அதனைச் சுற்றிப் பல வகையான காய், கனிகளையும் அழகுற அடுக்கி வைக்கின்றனர். இக்கோலத்தை “அத்தப்பூக் கோலம்” என்று அழைக்கின்றனர். அன்று மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பலவிதமான காய், கனிகளையும் உணவு வகைகளையும் விருந்தினர்களுக்கு வழங்கித் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். திருமால் உறையும் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விருந்துக்கு பிறகு ஆண்களும், பெண்களும் இணைந்து பல்வேறு நடனங்களை ஆடி மகிழ்வார்கள். ஓணப்பட்டுடுத்திய பெண்கள் அத்தப்பூ கோலத்தில் மீது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனை சுற்றி நடனமாடுவார்கள். மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆண்கள் புலிக்களி நடனம், களரி, கயிறு இழுத்தல், கடுவா ஆட்டம், எறி பந்து, கிளியாந்தட்டு, ஓண ஊஞ்சல் என நடக்கும் விளையாட்டுகள் மனதிற்கும், உடலுக்கும் உரம் சேர்க்கும் வகையில் இருக்கும்.