ஆவணி அவிட்டம் அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல் சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உபநயனம் என்றால் ‘நமக்கு துணையாக வரும் இன்னுமொரு “கண்” என்று பொருள். ஞானம் என்னும் கல்வி அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவாகும். அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுவதுண்டு.
தக்ஷிணாயன காலத்தில் வரும் ‘ஆவணி அவிட்டம்’ என்பது ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் வரக்கூடிய விழாவாகும். வரலட்சுமி விதம், காராடையான் நோன்பு போன்று பல விரதங்கள் பெண்களுக்கு உள்ளன. ஆண்களுக்காக இருக்கும் விழா ஆவணி அவிட்டம்.
வேத பாடங்களைப் பாராயணம் செய்து படிப்பதற்கு உத்தராயண காலத்தையும் அதன் உட்கருத்துக்களை, உப நூல்களையும் அறிந்து கொள்வதற்கு தக்ஷிணாயன காலத்தையும் நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள்.
தந்தை, ஆச்சார்யர், குரு இவர்களில் யாரேனும் ஒருவரின் வாயிலாக பூணூலை அணிவிக்கவேண்டும். திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும் திருமணமானவர்கள் இரண்டு பூணூலையும் திருமணமான பின் தந்தையை இழந்தவர் மூன்று மூன்று பூணூலையும் அணிய வேண்டும்.