முன்னாள் WWE சாம்பியன் ப்ரே வியாட் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 36.
2009ஆம் ஆண்டு முதல் WWE மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தவர் ப்ரே வியாட். மைக் ரோட்டுண்டா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 2010 முதல் 2011 வரை ஹஸ்கி ஹாரிஸ் என்ற பெயரில் போட்டிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் தனது பெயரை ப்ரே வியாட் என்று மாற்றினார். இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரஸ்ல்மேனியா போட்டிகளில் கலந்துகொண்டு புகழ்பெற்ற WWE வீரர்களாக தி அண்டர்டேக்கர், ஜான் சீனா, ரேண்டி ஆர்ட்டன் ஆகியோருடன் மோதியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த ப்ரே வியாட், இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதனை பிரபல முன்னாள் WWE வீரர் டிரிபிள் ஹெச் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற WWE வீரர் மைக் ரோட்டுண்டாவிடமிருந்து (ப்ரே வியாட்டின் தந்தை) தற்போது ஒரு அழைப்பு வந்தது.
எங்கள் WWE குடும்ப உறுப்பினர் ப்ரே வியாட் எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை காலமானார் என்ற சோகமான செய்தியை எங்களுக்கு அவர் தெரிவித்தார்.
அவரது குடும்பத்துக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இந்த நேரத்தில் அனைவரும் அவர்களது தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று டிரிபிள் ஹெச் கூறியுள்ளார்.
வியாட்டின் மறைவுக்கு WWE அமைப்பு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.