இந்தியாவின் கனவான நிலவு திட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் நாளை தரையிறக்கவுள்ளனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உலக நாடுகள் போட்டிப்போட்டு கொண்டிருக்கும் தருணத்தில், இந்தியாவின் சந்திரயான் – 3 திட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை பெற்றுள்ளது. இந்த நிலையில், சரித்தரம் படைக்கவுள்ள நிலவு பயணத்தில் பணியாற்றிய தமிழர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 9- ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனிவேலின் மகனான வீரமுத்துவேல் 1978- ஆம் ஆண்டு பிறந்தவர். விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை முடித்தார். பின்னர் பாலிடெக்கினில் பயின்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பி.இ பட்டம் பெற்றார். திருச்சி REC கல்லூரியில் எம்.இ பட்டம் பெற்றார். 2004- ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

சந்திரயான் 2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கியப் பங்காற்றினார், அப்போது திட்டத்தின் நாசா உடனான ஒருங்கிணைப்பை முற்றிலுமாக வீரமுத்துவேல் ஏற்றுக்கொண்டிருந்தார். 2016 ஆம் ஆண்டில், வீரமுத்துவேல். விண்கலத்தின் மின்னணுப் பொதியில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள முறை குறித்த தனது கட்டுரையை வழங்கினார். இது பெங்களூரில் உள்ள யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது.

சந்திரயான்-2-ன் திட்ட இயக்குநராக இருந்தவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே. சென்னையை சேர்ந்த முத்தையா வனிதா தான் சந்திரயான்-2-ன் திட்ட இயக்குநராக செயல்பட்டார். அப்போது அவர் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை பெற்றார். பொள்ளாச்சி அருகே கொத்தாவடி கிராமத்தில் பிறந்தவரான மயில்சாமி அண்ணாதுரை தான் சந்திரயான்-1ன் திட்ட இயக்குநர் ஆவார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த மங்கள்யான் திட்டத்திலும் மயில்சாமி அண்ணாதுரை முக்கிய பங்காற்றினார்.