
கேரள மாநிலம், வயநாடு மற்றும் கண்ணுார் பகுதிகளில், மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை உள்ளடக்கிய வனப்பகுதி முக்கோடு காடு. இதை முச்சந்தி என்றும் அழைக்கின்றனர். இந்தப் பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர், 2013ல் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவை அமைத்தனர். எனினும், ‘என்கவுன்டர்’ மற்றும் தொடர் கைது நடவடிக்கைகளால், அவர்களின் நடவடிக்கை முடக்கப்பட்டது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மாவோயிஸ்ட் அமைப்பை கட்டமைத்து, முழு வேகத்தில் செயல்பட துவங்கியுள்ளனர். அவர்களின் சமீப கால நடவடிக்கைகள், இதை உறுதிபடுத்துகின்றன. தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது.
பின்னர், மக்கள் விடுதலை கொரில்லா படையில் இணைக்கப்படுகின்றனர். அதேபோல கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பகுதியை சேர்ந்தவர்கள் சிலரும், இந்த இயக்கத்தில் புதிதாக சேர்த்துள்ளனர்.
மாவோயிஸ்ட் இயக்கத்தினர், கடந்த சில நாட்களாக, கேரளாவின் வயநாடுமற்றும் கண்ணுார் பகுதிகளில், ஆயுதம் ஏந்தி, கோஷமிட்டபடியே ஊர்வலமாக செல்கின்றனர். சமீபத்தில் கூட, மூன்று பெண்கள் உட்பட, 11 மாவோயிஸ்ட்கள், துப்பாக்கிகளுடன் கண்ணுார் அருகே கீழப்பள்ளியில் உள்ள அய்யன் குன்று பகுதியில் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
அப்போது, கோரிக்கைகள் அடங்கிய, கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை, அந்த பகுதியில் ஒட்டியுள்ளனர். மேலும், தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை பெற்றுச் சென்றுள்ளனர்.
இவர்கள், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் நுழையக் கூடும் என்ற தகவல் கிடைத்து, மூன்று மாநில போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.