தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்கவும், வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு துறைகளை சேர்ந்த புகழ்பெற்ற இந்தியர்களை தனது தேசிய தூதர்களாகத் இந்தியர் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு நடிகா் பங்கஜ் திரிபாதியை தேசிய தூதராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
2019 மக்களவைத் தேர்தலின் போது, கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் அமீர் கான், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் போன்ற பிரபலங்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதர்களாக இருந்தனர். அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் மாநிலங்களவை அமைச்சருமான சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படவுள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் சச்சினுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகவுள்ளது. இதையடுத்து, வரும் 3 ஆண்டுகளுக்கு வாக்காளர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் சச்சின் டெண்டுல்கர் ஈடுபட உள்ளார். இந்த புதிய கூட்டாண்மையின் மூலம், நகர்ப்புற மக்கள் மற்றும் இளைஞர்கள் வாக்களிப்பதில் காட்டும் அக்கறையின்மையைக் களையவும் தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ”இளைஞர்களிடையே சச்சின் டெண்டுல்கரின் இணையற்ற தாக்கத்தைப் பயன்படுத்தி, 2024 மக்களவைத் தேர்தல் உள்பட வரவிருக்கும் தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க பங்கை இந்த ஒத்துழைப்பு வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.