இனி கடைகளில் பொருள் வாங்கினால், அதற்கு, ஜி.எஸ்.டி., பிடித்திருந்தால், ‘பில்’ கேட்டு வாங்கவும். அந்த பில் வாயிலாக, 1 கோடி ரூபாய் வரை, அதிர்ஷ்ட பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நாடு முழுதும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள மிகப் பெரும் பிரச்னை, வரி ஏய்ப்பு தான்.
இதை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பி – 2 – பி எனப்படும் வணிகத்தில் இருந்து வணிகத்துக்காக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு, மின்னணு பில் தருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பி – 2 – சி எனப்படும் வணிகர்களிடமிருந்து நுகர்வோர் வாங்கும் பொருளுக்கான வரி, முறையாக செலுத்தப்படுவதை உறுதி செய்ய, மத்திய அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
‘மேரா பில் மேரா அதிகார்’ எனப்படும், என்னுடைய பில், என்னுடைய அதிகாரம் என்ற பெயரில், இந்த திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ், மொபைல்போன் செயலி வாயிலாக, நாம் வாங்கிய பொருளுக்கான பில்லை பதிவிட்டால் போதும்.
குறைந்தபட்சம், 200 ரூபாய்க்கான பில்லாக இருக்க வேண்டும். ஒரு மாதத்தில் ஒருவர் அதிக பட்சம், 25 பில்களை இதில் பதிவிடலாம்.
மாதத்தில், 500 முறை, கம்ப்யூட்டர் வாயிலாக குலுக்கல் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இதன்படி, ஒரு மாதத்தில், அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை பரிசாக பெற முடியும்.
இதைத் தவிர, காலாண்டுக்கு ஒருமுறை சிறப்பு குலுக்கல் நடத்தப்படும்.
இதில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, 1 கோடி ரூபாய் பரிசாக கிடைக்கும்.
தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு பில்களை மக்கள் கேட்டு வாங்குவதன் மூலம், வணிகர்கள், வர்த்தகர்கள் முறையாக வரி செலுத்துவதை உறுதி செய்யும் நோக்கத்துடன், இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது.