
‘நீட்’ தேர்வை ஏற்றுக்கொண்டு, தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்று வரும் நிலையில், மாணவர்களும், பெற்றோரும் போலி பரப்புரைகளையும், வாக்குறுதிகளையும் நம்பவேண்டாம். ‘நீட்’ தேர்வை நிறுத்துவதற்கு இனி வாய்ப்பில்லை என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், கல்வியாளர் பாலகுருசாமி கூறியுள்ளதாவது:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர தேசிய திறனறி முகமை, ‘நீட்’ தேர்வை நடத்துகிறது. நுழைவுத்தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றமும், தேசிய மருத்துவ ஆணையமும் அறிவித்துவிட்டதால், இனிமேல் ‘நீட்’ தேர்வை நிறுத்த வாய்ப்பில்லை. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வுக்கு தொடர்ந்து தயார்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
சில தலைவர்கள் போலியாகவும், சுயலாபத்திற்காகவும் வாக்குறுதிகளை கொடுக்கின்றனர். நீட் தேர்வின் அவசியத்தை சரியான முறையில் புரிந்துகொள்ளாதவர்கள் இதனை எதிர்த்து வருகின்றனர்; மருத்துவ கல்வியின் தரம், நுழைவுத்தேர்வின் அவசியம் குறித்த நுட்பமான பார்வை அவர்களிடம் இல்லை என்பதே உண்மை நிலவரம்.
‘நீட்’ தேர்வு தேவை
உலகம் முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகளில் மாணவர்கள் சேர்க்கையில், நுழைவுத் தேர்வு நடைமுறை ஓர் அம்சமாகவுள்ளது. இத்தேர்வுகள் அனைவருக்கும் பொதுவான தரத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட மாநிலங்களை கொண்ட இந்தியா போன்ற பெரிய நாட்டில், பல்வேறு வாரியத்தின் கீழ் மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், ஒரு படிப்பில் சேர்வதற்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித் தரத்தை உறுதி செய்து, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில், பொதுவான ஒருங்கிணைந்த வலிமையான நுழைவுத்தேர்வு கட்டாயமாகிறது. இத்தேர்வு வாயிலாக, நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேரும் வாய்ப்பு உண்டு. இதனால், மாநில அரசின் இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இம்மதிப்பெண்ணை வைத்து, வெளிநாடுகளில் கல்விநிறுவனங்களில் சேரவும் வழி செய்யப்படுகிறது.
‘நீட்’ தேர்வு முறையை முதலில், 2005-06ம் ஆண்டில் அறிமுகம் செய்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். அதில், தி.மு.க., அரசும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பா.ஜ.க, கொண்டு வந்ததாக கூறுவது தவறானது. பின்னர் சட்ட சிக்கல்களால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் இறுதியான தெளிவான தீர்ப்பை அடுத்தே, பா.ஜ.க, தலைமையிலான அரசு, 2016ம் ஆண்டு நீட் தேர்வை நடைமுறைக்கு கொண்டுவந்தது. இதில், அரசியல் காரணங்களுக்காக தவறான பரப்புரை செய்யப்படுகிறது.
தோல்விக்கு யார் காரணம்
‘நீட்’ தேர்வு கடினமாக தோன்ற, 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டமும், பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் பள்ளிகள் பிளஸ் 2 பாடத்தை மட்டும் பொதுத்தேர்வுக்காக தயார்படுத்தியதே காரணம். அண்மையில், பள்ளி பாடத்திட்டம் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பது ஏற்க முடியாத வாதம், அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரத்தை மேம்படுத்தவேண்டுமே தவிர; அதை முன்வைத்து நுழைவுத்தேர்வை எதிர்ப்பது சரியல்ல.
மேலும், பயிற்சி மையங்கள் வருவதற்கு காரணமாக உள்ளது என்பது தவறான புரிதல், அதற்கு முன்பே பொறியியல் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை ‘டியூசன்’ என்ற பெயரில் தனியார் பயிற்சி மையங்கள் காலம் காலமாக இருக்கிறது. பிளஸ் 2 தேர்வுக்கு மாணவர்களை அடைத்து வைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுவதுடன்; கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
தற்கொலை தீர்வல்ல
‘நீட்’ தேர்வு தற்கொலைக்கு வழிவகுக்கிறது என்பது சரியான வாதம் அல்ல. இதனால், சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்பது உண்மை. அதை வைத்து தேர்வே வேண்டாம் என்பது சரியல்ல. அப்படியானால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் விபரீத முடிவை தேடிக்கொண்ட துயரமான நிகழ்வுகளும் உண்டு.
அதற்காக, பொதுத்தேர்வு முறைகளை ரத்து செய்ய இயலுமா. மாணவர்கள் இத்தகைய விபரீதமான முடிவுகளை கைவிடவேண்டும். அதிக விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்தவேண்டியது அவசியம். இவ்வாறு பாலகுருசாமி கூறியுள்ளார்.
நம்ம பாணியில சொல்றதா இருந்தா. தேர்தல் இல்லாம, தேர்தல்ல நிக்காம, தேர்தல்ல ஜெயிக்காம எம் எல் ஏ ஆக முடியுமா..
எம் எல் ஏ ஆகாம மந்திரியாக முடியுமா ?
அதுனால அறிவாலய குரூப் சொல்றதை கேக்காம..ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணி முன்னேர்றதுக்கு வழியை பாருங்கப்பா..