–  அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர்.

பாதயாத்திரையாக, 21 நாட்களை வெற்றிகரமாக முடித்து, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதிகளுக்கு சென்றேன். மாநாட்டிற்கு இணையாக திரண்ட மக்கள் கூட்டத்தின் அன்பு பெருக்கிலே, முற்றிலுமாக கரைந்து போனேன். வீரத்தின் விளை நிலமாம், நெல்லை மண்ணுக்கு, எப்போது வந்தாலும் உற்சாகம் உடைப்பெடுக்கும்.

கடந்தாண்டு ஜூன் 5ல், நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில், பிரதமர் மோடியின், 8ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது. சுதந்திர போராட்டத்தின் போது, திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆங்கிலேயரை சுட்டுக் கொன்று, தன்னுயிரையும் மாய்த்த மாவீரன் வாஞ்சிநாதன் பிறந்த மண் செங்கோட்டை.

தாமிரபரணி நீர் மாசு குறித்த ஆய்வில், அனுமதித்ததை விட ஆறு மடங்கு மாசு அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது. குடிக்கவோ-, குளிக்கவோ பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது. இது பற்றி தமிழக முதல்வருக்கு கவலை இல்லை; மது விற்பனையில் எப்படி வருவாயை பெருக்கலாம் என்பதே, அவரின் ஒரே சிந்தனை.

‘தமிழகத்தின் நீர்நிலைகளை பாதுகாக்க, அரசுத் துறை செயலர்கள் அடங்கிய நிரந்தர கமிட்டி அமைக்க உத்தரவிட்டும், ஏன் இன்னும் அமைக்கவில்லை’ என கேள்வி எழுப்பி, தலைமை செயலருக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கடிதம் எழுதியுள்ளது. இதுகூட, இப்போது நாம் சொல்லி தான் ஆட்சியாளர்களுக்கு தெரியும்.
எங்கும் ஊழல்

  • பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி., மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 14 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேர மழைக்கு தாங்காமல், எட்டு மாதத்தில் இடிந்து விழுந்துள்ளது.
  • மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து, பணம் சம்பாதிப்பதை மட்டுமே, தி.மு.க., குறிக்கோளாக வைத்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு தர, தி.மு.க., கவுன்சிலர், 2,000 ரூபாய் கேட்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். யாராவது பணம் கேட்டால், பா.ஜ., தொண்டனை கூப்பிடுங்கள்; போதும்.
    அம்பாசமுத்திரம்

நம்மிடையே அன்று, தொழில் ரீதியான வேறுபாடுகள் இருந்ததே தவிர, ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை, இந்தியாவிற்கே விவரிக்கும் ஊராக அம்பாசமுத்திரம் உள்ளது.

ஊதிய உயர்வு கோரி, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், 1999 ஜூலை 22ல், திருநெல்வேலியில் நடத்திய பேரணியின் போது, போலீசார் நடத்திய தடியடியில், 17 பேர் உயிரிழந்தனர். அப்போது, தி.மு.க., ஆட்சி நடந்தது.

தமிழகம் இன்று இந்தியாவின் நம்பர் ஒன்; அதாவது, ஊழல் செய்வதில், கடன் வாங்குவதில், ‘டாஸ்மாக்’ வருமானத்தில், அதிகப்படியான ‘லாக்- அப்’ மரணங்களில், கனிமவள கொள்ளையில் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
கருணாநிதி காரணம்

கனிம வளங்களை கேரளாவுக்கு தாரை வார்ப்பது, காவிரி நீரின் உரிமையை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது போன்ற சாதனைகளை படைத்த தி.மு.க., இலங்கைக்கு எப்படி கச்சத்தீவை தாரை வார்த்தது என்பதை ஆதாரங்களுடன் விளக்குவோம். தி.மு.க., இனிமேல் தப்பிக்கவே முடியாது.

‘கச்சத்தீவை மீட்பதே மீனவர்களுக்கு நல்லது’ என்று துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்ததை, ஸ்டாலின் படித்துள்ளார். ‘இது தெரிந்தும், ஏன் தாரை வார்த்தீங்க’ என்று கேட்டால், ‘கச்சத்தீவை நாங்கள் தாரை வார்க்கவில்லை’ என்று கூசாமல் பொய் கூறுகின்றனர். தமிழர்களின் உரிமையான கச்சத்தீவு பறிபோனதற்கு கருணாநிதியே காரணம்.

கடந்த 1972, ஜூலை 15ல், ராமநாதபுரம், ‘கெஜட்’ திருத்திய புது பதிப்பை வெளியிடுகிறது. அதன் முதல் பக்கத்தில் உள்ள இந்திய வரைபடத்தில் கச்சத்தீவு இல்லை. முதல்வராக இருந்த கருணாநிதி, புதிய பதிப்பிற்கு அணிந்துரை வழங்கி கையெழுத்திட்டார்.

இதன் பின் தான், 1974ல் கச்சத்தீவை காங்., அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது. ‘சீனா அல்லது அமெரிக்காவுடன் நாங்கள் நட்புறவு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், கச்சத்தீவை கொடுங்கள்’ என்று, இந்திராவிடம், சிரிமாவோ பண்டாரநாயகா பேரம் நடத்தினார். பார்லிமென்ட் அனுமதி பெறாமல், இந்திரா கச்சத்தீவை கொடுத்தார்.

அப்போது, குறைந்தபட்ச எதிர்ப்பை கூட தெரிவிக்காமல், மாநில உரிமைகளை மறந்து, கண்டும் காணாமல் இருந்தவர் கருணாநிதி. கச்சத்தீவை தாரை வார்க்க ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட்களுக்கு, அது பற்றி பேச கடுகளவும் உரிமை கிடையாது.

பின் இந்திரா, 1976ல், ‘கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது’ என்ற, இன்னொரு ஒப்பந்தமும் போட்டார். அப்போது, ஒரு சம்பிரதாயமான கண்டனம் மட்டும் தெரிவித்து விட்டு, தி.மு.க., அமைதி காத்தது.

அன்றைக்கு, ‘கச்சத்தீவு சிங்களவருக்குத் தான்’ என்று சொன்ன இந்திராவை, ‘நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக’ என்று அழைத்தார் கருணாநிதி. அதன்பின், பல முறை தி.மு.க., — காங்., கூட்டணி ஆட்சி நடத்தியது. அப்போதும், கச்சத்தீவு தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க., மாநில உரிமைகள் பற்றி பேசுவது வேடிக்கை.
மேற்கு வங்கம்

இதேபோன்ற ஒரு சம்பவம், மேற்கு வங்கத்தில் நடந்தது. தற்போதைய மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியான பேருபரியை, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு தானமாக வழங்க நேரு முடிவெடுத்தார். அப்போது, காங்., சார்பில் மாநில முதல்வராக இருந்த டாக்டர் பி.சி.ராய், பிரதமரின் முடிவை ஆட்சேபித்தார்; உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

‘பார்லிமென்ட் தீர்மானம் இல்லாமல், நாட்டின் ஒரு பகுதியை, வேறொரு நாட்டுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது’ என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சொந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதமரையே எதிர்த்தார் பி.சி.ராய்.

அவர் வாழ்ந்த நாட்டில் தான், கருணாநிதி போன்றவர்களும் வாழ்ந்துள்ளனர். கச்சத்தீவுக்காக, தி.மு.க., விட்ட முதலை கண்ணீரையும், ஓநாய் அழுகையையும், மக்களுக்கு பாதயாத்திரை வாயிலாக புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன்.