திரைப்படம் நடித்து தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நடிகர் யோகிபாபு மோசடி செய்வதாக தயாரிப்பாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாசீர் என்கிற முகம்மது ஹாசீர். இவர் விருகம்பாக்கம் கோதாவரி தெருவில் “ரூபி பிலிம்ஸ்” என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். “வண்டி”, “கன்னிமாடம்”, “மங்கி டாங்கி” உள்ளிட்ட பல திரைப்படங்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் கௌசிக் ராமலிங்கம் என்பவர் இயக்கத்தில் நடிகர்கள் யோகி பாபு, GV பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் “ஜாக் டேனியல்” என்ற திரைப்படத்தை ஹாசீர் தயாரித்துள்ளார். இந்த நிலையில் நடிப்பதற்கு தன்னிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அதன் பிறகு நடிக்க வராமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வருவதாக நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் ஹசீர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் யோகி பாபு ரூ. 65 லட்சம் ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் தொகையாக ரூ. 20 லட்சம் கொடுத்ததாகவும், குறிப்பாக ரூ. 5 லட்சம் பணமாகவும், 15 லட்சம் காசோலையாகவும் கொடுத்ததாகவும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்பட ஷூட்டிங் தொடங்கியதும் நடிகர் யோகி பாபுவை நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அழைத்ததாகவும், ஆனால் யோகி பாபு வராமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார்.இதனால் பணத்தை திருப்பி தரும்படி கேட்டபோது பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாகவும் இதனால் தனது பணத்தை மீட்டுத் தரும்படியும் தயாரிப்பாளர் ஹாசீர் புகாரில் தெரிவித்து இருந்தார்.