எதிர்தரப்பு மாணவர்களை மிரட்ட தீபாவளி பட்டாசை, நாட்டு வெடிகுண்டு போல் தயார் செய்து வீசியது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக இன்று காலை கிண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் 30க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வெடிக்காமல் இருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்த போது, அது நாட்டு வெடிகுண்டு இல்லை என்பதும் சவ ஊர்வலத்தில் வெடிக்க பயன்படுத்தும் பட்டாசு என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பிடிப்பட்ட மாணவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பி.ஏ பொருளாதாரம் மற்றும் பி.ஏ டிபன்ஸ் படிக்கும் மாணவர்கள் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இன்று காலை கேண்டீனில் கானா பாடல் பாடி கிண்டல் செய்து வந்த போது இரு தரப்பு மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒரு தரப்பு மாணவர் பையிலிருந்து பட்டாசை, நாட்டு வெடிகுண்டு போல் சுற்றி கொளுத்தி வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதில் ஒரு பட்டாசு மட்டும் வெடித்தது. மற்றவை வெடிக்காமல் போனதும், எதிர்தரப்பை பயமுறுத்துவதற்காக பட்டாசை நாட்டு வெடிகுண்டு போல் சுற்றி வீசியதாக மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பிடிப்பட்ட மாணவர்களிடம் கிண்டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லுரியில் மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.