இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஆக. 21, 23-ம் தேதிகளில் சில இடங்களிலும், ஆக. 22-ம்தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக. 24, 25, 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (ஆக. 21) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், அரியலூர், கடலூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, நாளை டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய,லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஆக. 20-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக சென்னை மணலி, உத்தண்டி, நீலகிரி மாவட்டம் வென்ட் வொர்த் எஸ்டேட், செருமுள்ளி ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., சென்னை சோழிங்கநல்லூர், அண்ணா பல்கலைக்கழகம், கத்திவாக்கம், அம்பத்தூர், ராயபுரம், திரு.வி.க.நகர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.