மகாவிஷ்ணுவின் வாகனமாக இருப்பவர் கருடபகவான். இவர் பெரிய திருவடி என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணு தலங்கள் அனைத்திலும் அவரது கருவறைக்கு எதிராக தனிச்சன்னிதியில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெற்றவர். பெருமாள் கோவில் பிரமோற்சவத்தின் போதும், கருட சேவையின் போதும் பல்வேறு விழாக்களின் போதும் பெருமாள் ஸ்ரீ கருடன் மீது அமர்ந்து வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
கருட தரிசனம் சுப தரிசனமாகும். கருடன் மங்கள வடிவானவன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படு கிறது. கோவில்களில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும் போது கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். ஸ்ரீகருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார்.
பெருமாள் கோவில்களில் மூலவருக்கு முன்பாக நேராக எழுந்தருளி இருக்கும் இவரையே பக்தர்கள் முதலில் வணங்க வேண்டும். பக்தர் களுக்கு சிறிய துன்பம் ஏற்பட்டாலும் துயர் துடைத்து இன்பம் அருளி உரிய நேரத்தில் காப்பவர் இவர். கருட தரிசனம் பகை பிணி போக்கும். நிறை செல்வத்தை நல்கும்.
காசிப முனிவரின் மனைவிகள் கத்ரு, வினதை. இவர்களில் கத்ரு நாகர்களுக்கு தாயாக விளங்கினாள். வினதை அருணனையும், கருடனையும் பெற்றாள். ஒரு முறை கத்ரு, வினதையை அடிமைப்படுத்தும் எண்ணத்துடன் வம்புக்கு இழுத்து, ‘இந்திரனின் குதிரை (உச்சைஸ்வரஸ்) என்ன நிறம்?’ எனக் கேட்டாள்.
அதற்கு வினதை ‘இதில் என்ன சந்தேகம்? வெள்ளை நிறம்’ என்று பதிலளித்தாள்.
‘இல்லை கருப்பு நிறம்’ என்றாள் கத்ரு. விவாதம் வளர்ந்து போட்டியாக மாறியது. இந்தப் போட்டியில் ‘ஜெயித்தவர் தோற்றவருக்கு அடிமையாக வேண்டும்’ என்ற நிபந்தனையை இருவரும் வகுத்துக் கொண்டனர்.
கத்ரு, குதிரையின் வெண் நிறத்தை கறுப்பு நிறமாக மாற்ற தன் மகனாகிய கார்க்கோடகன் என்ற கருநிற பாம்பை குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுமாறு பணித்தாள். அதன்படியே கார்க்கோடகன் செய்ய பாம்பு சுற்றிய வால் கருப்பு என்று காட்டி வினதையை அடிமையாக்கிக் கொண்டாள். இதனால் அவளது மகன்கள் அருணனும், கருடனும் கூட அடிமையாக மாறிப்போனார்கள். தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், அனைவருக்கும் விடுதலையளிப்பதாக கத்ரு கூறினாள்.
கருடனும், சரி என்று கூறி விரைவாக தேவலோகத்தை அடைந்தார். அவரை தேவேந்திரனும், தேவர்களும் வஜ்ராயுதம் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தடுத்தனர். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு மரியாதை அளிக்க விரும்பிய கருடன், தன் சிறகுகளில் ஒன்றை அதற்கு அர்ப்பணம் செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரன், ‘எதற்காக இங்கே வந்தாய்?’ என்று கருடனைப் பார்த்துக் கேட்டான்.
கருடனும் தான் வந்த விஷயத்தை இந்திரனிடம் கூறினார். மேலும், ‘நான் கத்ருவிடம் அமிர்தத்தை கொடுத்து என் அன்னையை விடுதலை செய்தவுடன், தாங்கள் அமிர்தத்தை இங்கு கொண்டு வந்து விடலாம்’ என்று கூறினார். எனவே இந்திரன் சம்மதம் தெரிவித்தான். கருடன் அமிர்தத்தைக் கொண்டு போய், கத்ருவிடம் கொடுத்து தாயை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார்.
தாயாரின் அடிமைத்தனம் நீங்குவதற்காக வீரம், பலம், தைரியம், பணிவு, அடக்கம் நிறைந்த தாயன்புடன் செயல்பட்ட கருடனைக் கண்டு மகிழ்ந்த திருமால், ‘நீ எப்போதும் எனது வாகனம் ஆக கடவாய்’ என்று கூற, அவரும் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கி வருகிறார்.