தென் மாவட்டங்களுக்கு பஸ்ஸுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு பெருங்களத்தூர் என்றால் நன்றாக தெரியும்.
மாலை 6 மணியில் இருந்து இரவு 12 மணி வரை சாலை ஓரத்தில் கூட்டம் கூட்டமாக நின்று பஸ்ஸுக்கு காத்திருந்து ஏறிச் செல்வார்கள்.
அங்கு எந்த வசதியும் கிடையாது .போதுமான போலீஸ் பாதுகாப்பு கிடையாது.
இத்தனைக்கும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அங்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளது.
அங்கு அரசு பஸ்கள் வந்து நின்று மக்களை ஏற்றி செல்கின்றன.
ஆனால் அந்த பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் இஷ்டம் போல் சாலையில் நின்று பயணிகளை ஏற்றுகிறார்கள்.
விளைவு போக்குவரத்து நெரிசல்.
இதை தடுக்க தான் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டினார்கள்.
அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு கட்டத் தொடங்கிய பேருந்து நிலையம் திமுக ஆட்சி வந்த பிறகு கட்டி முடிக்கப் பட்டாலும் இன்னும் திறக்கப்படவில்லை .
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் அந்த பஸ் நிலையம் முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கி விட்டது.
இத்தனைக்கும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்னும் முழுமையான மழை காலம் தொடங்கவில்லை.
அதற்குள்ளாகவே இந்த நிலை. அப்படியானால் இந்த பஸ் நிலையத்தை வடிவமைத்தது யார்? வரைபடம் தயாரித்து கொடுத்தது யார் .?
எல்லோரும் பொறியாளர்களாகத் தான் இருப்பார்கள்.
ஆனாலும் இதையெல்லாம் ஏன் முன்கூட்டியே திட்டமிடவில்லை என்பதுதான் கேள்விக்குறி. பலகோடி ரூபாயை கொட்டி கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே இந்த நிலை என்றால் பயன்பாட்டுக்கு வந்த பிறகு எந்த நிலை ஏற்படுமோ?
சென்னை நகரம் ஒழுங்கற்ற முறையில் ராட்சச தனமாக (பிராங்க ஸ்டைன்) வளர்ந்து வருகிறது. இதற்கு ஒவ்வொரு துறையும் காரணம். அதில் போக்குவரத்து துறையும் முக்கிய காரணம்.
மற்ற பகுதிகளில் சிறந்த கல்வி வாய்ப்பு இல்லாமை, வேலை இல்லா திண்டாட்டம், சாதி மத அழுத்தங்களினால் ஏற்படும் சமூக சிக்கல்கள் போன்றவை காரணமாகவே மக்கள் சென்னைக்கு இடம் பெறுகிறார்கள்.
இதனால் சென்னை நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போகிறது. ஒரு பக்கம் தமிழ்நாட்டு மக்கள். மறுபக்கம் வெளி மாநில இளைஞர்கள், முதலாளிகள்
வந்து குவிவதால் இதை எப்படி முறைப்படுத்தப் போகிறார்கள் என்ற வினா பெரிதாகிக்கொண்டே போகிறது.