தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள மத்திய மாவட்ட செயலாளர் ஆலோசனைப்படி மேயர் இராமச்சந்திரன், மாநகராட்சியில் உள்ள திமுக கவுன்சிலர்களை சரிகட்ட புது வியூகம் அமைத்ததாகவும், அதன்படியே இந்த சுற்றுலா திட்டம் எனவும் கூறப்படுகின்றது.
சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் 40 பேர், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கேரளாவுக்கு மூன்று நாள் இன்ப சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்கள். ஒவ்வொரு கவுன்சிலரும் அவருடன் மூன்று பேரை அழைத்துவர அனுமதி வழங்கப்பட்டு, அதில் சில கவுன்சிலர்கள் தனது குடும்பத்தினரையும், சிலர் தனது நண்பர்களையும் இண்டு பேருந்துகளிக் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவில் பங்கேற்க சில மூத்த திமுக கவுன்சிலர்கள் விருப்பம் இல்லாமல் விலகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரனை மாற்றவேண்டும் என அவருக்கு எதிராக தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பிய மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் சரவணன் மற்றும் ஜெயக்குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோன்று அதிருப்தியில் மேலும் சில கவுன்சிலர்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள மத்திய மாவட்ட செயலாளர் ஆலோசனைப்படி மேயர் இராமச்சந்திரன், மாநகராட்சியில் உள்ள திமுக கவுன்சிலர்களை சரிகட்ட புது வியூகம் அமைத்ததாகவும், அதன்படியே இந்த சுற்றுலா திட்டம் எனவும் கூறப்படுகின்றது.
சேலம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழி வெட்டப்பட்டு அது நிறைவு பெறாமல் மரண குழியாக காட்சியளிக்கின்றது. குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு பிரச்சனை, மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பள பிரச்சினை, தூய்மை பணியாளர்களுக்கு இடம் மாறுதல் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகள் அன்றாடம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், மேயர் ராமச்சந்திரன் கவுன்சிலர்களுடன் இன்ப சுற்றுலாவுக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.