தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் தமிழகம் முழுவதும் தினசரி சுமார் 29லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதில் 50% அதாவது 14.5லட்சம் லிட்டர் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலேயே விற்பனை செய்யப்பட்டு விடுகிறது.
மேலும் கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்பிருந்த தினசரி பால் கொள்முதல் சுமார் 38லட்சம் முதல் 42லட்சம் லிட்டர் என்கிற நிலையில் இருந்து ஆவடி சா.மு.நாசர் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கடும் சரிவை சந்தித்து தினசரி பால் கொள்முதல் சுமார் 25லட்சம் முதல் 27லட்சம் லிட்டர் என்கிற படுபாதாள நிலைக்குச் சென்றது.
அதன் பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை சீரமைப்பு நடவடிக்கைக்கு பின்னர் கடந்த மே மாதம் பால்வளத்துறை அமைச்சராக திரு. மனோ தங்கராஜ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு சற்றே உயரத் தொடங்கிய தினசரி பால் கொள்முதலானது சுமார் 30லட்சம் லிட்டர் என்கிற நிலையை அடைந்தது.
இந்த நிலையில் ஆவினுக்காக பால் கொள்முதல் செய்யும் பாலினை பல்வேறு மாவட்ட ஒன்றியங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இருந்து அண்டை மாநிலங்களுக்கும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் முறைகேடாக அனுப்புவதாக கூறப்படும் நிலையில் தற்போது தினசரி பால் கொள்முதல் மீண்டும் சரிவடையத் தொடங்கி தினசரி பால் கொள்முதல் சுமார் 28லட்சம் முதல் 29லட்சம் லிட்டராக குறைந்து போனது.
பாலுற்பத்தி, பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் பொதுமேலாளர்கள் உள்ளிட்ட ஆவின் அதிகாரிகளின் மெத்தனப்போக்கினாலும், ஊழல் முறைகேடுகளாலும் ஆவினுக்கான பால் கொள்முதல் தற்போது மீண்டும் சரிவடையத் தொடங்கியிருப்பதால் ஆவினின் தினசரி பால் விற்பனையில் 50% விற்பனை நடைபெறும் “சென்னை மாநகரில் ஆவின் பால் விற்பனையை திட்டமிட்டு குறைக்கும் நோக்கில் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு இன்று (18.08.2023) முதல் சீலிங் முறை அமுல்”படுத்தியிருக்கிறது (அதாவது நேற்று முன்தினம் வரை எந்த அளவு பால் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்தனரோ அதே அளவு தான் இனிமேல் வழங்கப்படும்),
அதுமட்டுமின்றி பால் முகவர்களுக்கு விநியோகம் செய்வதற்காக மொத்த விநியோகஸ்தர்கள் கொள்முதல் செய்யும் ஆவின் பால் பாக்கெட்டுகளின் அளவை நேற்று முதல் (17.08.2023) 5% குறைத்து தான் வழங்க முடியும் என்றும், இனிமேல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் கொள்முதல் அளவை குறைக்க மட்டுமே முடியும் என்றும், எக்காரணம் கொண்டும் கொள்முதல் அளவை அதிகரிக்க முடியாது எனவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ள ஆவின் நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றொன்றும் சக பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை அளவை விட அதிகரித்து வளர்ச்சியடைய வேண்டும் என்கிற குறிக்கோளோடும், குறிப்பிட்ட இலக்கோடும் பால் உற்பத்தியாளர்களுக்கு காலத்திற்கேற்ற வகையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது, கூடுதலாக வழங்கும் பாலுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, பால் விற்பனையை அதிகரிக்க நுகர்வோருக்கும், பால் முகவர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்குவது என ஆக்கபூர்வமாக செயல்பட்டு கொண்டிருக்க, தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினிலும், பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையிலும் பணியாற்றுபவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மகராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வெண்ணெய், பால் பவுடர் கொள்முதல் செய்வதிலேயே குறியாக இருந்து வருகின்றனர்.
அதன் காரணமாக வளர்ச்சியடைய வேண்டிய “ஆவினோ கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை” போல கடந்த அதிமுக ஆட்சியில் இருந்ததை விட நாளுக்கு நாள் வளர்ச்சியை நோக்கி பயணிக்காமல் வீழ்ச்சியை நோக்கி பயணிப்பதும், ஆட்சிபுரிபவர்கள் ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்வதும் மிகுந்த வேதனையளிப்பதாக இருக்கிறது.
எனவே ஆவின் நிர்வாகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க பிரதிநிதிகளை நேரில் அழைத்துப் பேசி பால் கொள்முதல் விலை மற்றும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கிடவும், ஆவின் பால் விற்பனை விலையை தமிழகம் முழுவதும் ஒரே சீரான அளவில் மாற்றி அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் “பாலுற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டுத்துறையிலும், ஆவினிலும் உள்ள ஊழல் பெருச்சாளிகளை கூண்டோடு களையெடுக்க கடுமையான நடவடிக்கை என்கிற சாட்டையை சுழற்ற வேண்டும்”, அப்போது தான் திமுக ஆட்சியில் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் காப்பாற்றப்படும், ஆவினை நம்பி சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்கள் காப்பாற்றப்படுவார்கள், அவ்வாறு “தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆவினுடைய வீழ்ச்சியை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்பதை தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடுபால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
18.08.2023 / காலை 9.45மணி