வண்டலூரில் உள்ள தேசிய பாதுகாப்பு படை வளாகத்தில் 30.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 64 குடியிருப்பு வளாகங்களை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்து உரையாற்றினார். அப்போது:-
9 ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்காக 28 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டி வழங்கி உள்ளது.
பாதுகாப்பு வீரர்களின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் திட்டத்தை செயல்படுத்தி, 39 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் திட்டத்தில் இணைந்துள்ளார்.
திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 20000 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு படை வீரர்கள் எந்தவிதமான பணபரிமாற்றமும் இன்றி சிகிச்சை மேற்கொள்ளலாம்.
நாட்டில் அமைதி நிலவ பணிபுரியும் நமது பாதுகாப்பு படை வீரர்கள் நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாக விளங்குகிறார்கள் என பேசினார்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அமைச்சர் முன்னிலையில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை, துப்பாக்கி சுடுதல் போன்ற சாகசங்களை தத்துரூபமாக செய்து காட்டினார்.
மேலும் உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தேசிய பாதுகாப்பு மையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார் மேலும் பாதுகாப்பு படை வீரர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சி தேசிய பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர்
அஜய் குமார் மிஸ்ரா கூறுகையில்:-
தேசிய பாதுகாப்பு படை சென்னை மையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்துள்ளேன். இது பாதுகாப்பு படை வீரர்களுக்கு குடும்பத்திற்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மணிப்பூர் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது. மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் மணிப்பூரில் அமைதி நிலவும் இவ்வாறு அவர் கூறினார்.