மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3-ம் தேதி தொடங்கப்பட்டு, 2024 ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு,தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் கட்சி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்துவது தொடர்பாக நிர்வாகிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.19-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் பன்முக ஆற்றல், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களை ஓராண்டு முழுவதும் எடுத்துரைத்தாலும் முழுமையடையாது. இருந்தாலும், தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவை எழுச்சி, உணர்ச்சியுடன் தமிழகம் முழுவதும் நடத்துவது தொடர்பாக, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.19-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அமைச்சர்கள் பங்கேற்பு: இதில், கருணாநிதி நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள், அனைத்து அணிச் செயலாளர்கள், அமைச்சர்கள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.