தொழிலதிபருக்கு கடன் பெற்றுத்தருவதாக கூறி, 12 கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்.
கோவையை சேர்ந்த ராஜன் பாபு என்பவர், காற்றாலை மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இவருக்கு தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக 500 கோடி ரூபாய் தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில் நிறுவனங்களுக்கு கடன் பெற்றுதரும் ஏஜெண்ட்டான சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் ராஜன்பாபுவிற்கு அறிமுகமாகியுள்ளார்.
500 கோடி ரூபாய் வாங்கித் தருவதாகவும், அதற்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கமிஷன் வேண்டும் எனவும் சரவணன் கேட்டுள்ளார். கமிஷன் தொகையை அனுப்பிய நிலையில், சரவணனை தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த மோசடி தொடர்பாக ராஜன்பாபு அளித்த புகாரின்பேரில், தனியார் வங்கி மேலாளர் பாலாஜி, புவனேஷ், கோவிந்தன் ஆகியோரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்