சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (30). இவர் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜெனிபர் (25). இவர்களுக்கு கடந்த 7 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதன்பிறகு கொஞ்ச நாட்களிலேயே தம்பதி இடையே பிரச்னைகள் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ஜெனிபர் அடிக்கடி தனி குடித்தனம் போகலாம் என்று அழைத்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜெனிபர், கணவர் ஆரோக்கியராஜ் உடன் தகராறு செய்துவிட்டு பெரம்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் சில நாட்களாகவே ஆரோக்கியராஜ் கடும் மன உளைச்சல் அடைந்தார்.நேற்று காலை 10 மணியளவில், தனது வீட்டின் அருகில் உள்ள சர்ச் பாதிரியாருக்கு செல்போனில் பேசிய ஆரோக்கியராஜ், ‘‘நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து பாதிரியார் தனக்கு தெரிந்த ஒரு நபரை ஆரோக்கியராஜ் வீட்டுக்கு உடனடியாக அனுப்பிவைத்துள்ளார். அப்போது ஆரோக்கியராஜின் தாய் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அவரிடம் விஷயத்தை தெரிவித்து இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஆரோக்கியராஜ் தூக்கில் பிணமாக கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எம்கேபி.நகர் போலீசார் சென்று ஆரோக்கியராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஆரோக்கியராஜ் வீடியோ பதிவு ஒன்றை தனது அக்காவிற்கு அனுப்பி உள்ளார். அதில், ‘’தனது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. என்னால் குடியை மறக்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் அடிப்படையிலும் விசாரிக்கின்றனர்.