காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், தென்னேரி பகுதியை சேர்ந்தவர் பிரென்ச் ஜெஃப்ரி தவமணி (23),
மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திமோ மில்கி (19),
பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (19), சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாய் கௌசிகன் (19) இவர்கள் நான்கு பேரும் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை கல்லூரி முடிந்து மூன்று இருசக்கர வாகனத்தில் மேற்கண்ட நான்கு பேர் உட்பட ஆறு பேர் சேலையூர் காவல் நிலையம் எதிரே உள்ள ஏரிக்கரை தெருவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மழை வந்ததால் அவர்கள் அங்கிருந்த பழைய கட்டிடத்தின் படிக்கட்டு கீழே சென்று மழைக்காக ஒதுங்கி உள்ளனர்.
அப்போது திடீரென படிக்கட்டு சரிந்து மாணவர்கள் மேல் விழுந்ததில் பிரென்ச் ஜெஃப்ரி தவமணி, திமோ மில்கி, அஸ்வின், சாய் கௌசிகன் (19) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த மற்ற இரண்டு மாணவர்கள் உடனடியாக ஓடி சென்று அங்கிருந்த பொதுமக்கள், தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி நான்கு பேரையும் வெளியே மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட நான்கு பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் பிரென்ச் ஜெஃப்ரி தவமணி, திமோ மில்கி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
அஸ்வின், சாய் கௌசிகன் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பிரென்ச் ஜெஃப்ரி தவமணி, திமோ மில்கி ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.