பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி. முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த ஐ.ஜி. முருகனை சந்திக்க சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அலுவலகத்திலேயே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 2017 ஜூலை முதல் 2018 ஆகஸ்ட் வரை பலமுறை தனக்கு ஐ.ஜி. முருகன், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அதிகாரி 2018-ல் புகார் அளித்தார்.

அலுவல் ரீதியாக சந்திக்க சென்ற தம்மிடம் ஆபாசமாக பேசியதாகவும் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி கிண்டல் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.

பெண் அதிகாரியின் ஒப்புதல் இன்றி அவரை செல்போனில் படம்பிடித்ததாகவும் ஐ.ஜி. முருகன் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டது.

செல்போனில் படம் எடுத்தது பற்றி கேள்வி எழுப்பியபோது தனது மனைவியிடம் காட்டுவதற்காகவே படம் எடுத்ததாக கூறியதாகவும் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

2018 ஆகஸ்ட் 1-ல் அலுவலகத்தில் இருந்தபோது இன்டர்காம் மூலம் பெண் அதிகாரியை அழைத்த முருகன் அவரது அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் புகார் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, 3 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர்கள் ஆகியோர் முருகனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர்.

சிபிசிஐடி போலீசார் முன் ஆஜரான ஐ.ஜி. முருகன் தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும்

அதிமுக ஆட்சியில் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி முறையீட்டை ஏற்று ஐகோர்ட் தெலுங்கானா மாநிலத்துக்கு வழக்கை மாற்றியது.

தெலுங்கானா மாநிலத்துக்கு வழக்கை மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஐ.ஜி.முருகன் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டை ஏற்று தமிழ்நாட்டிலேயே வழக்கை நடத்த உச்சநீதிமன்றம் 2021-ல் அனுமதி அளித்தது.

உச்சநீதிமன்ற அனுமதிக்கு பிறகும்
2 ஆண்டுக்கு மேலாக வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி. முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர், தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.