கா.குற்றாலநாதன்
மாநிலச் செயலாளர்
இந்து முன்னணி

தென்னகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு பக்தர்கள் அவ்வப்போது பசுக்களையும் கன்றுகளையும் காளைகளையும் தானமாக வழங்கி கோசாலை அமைப்பதற்கு உபகரணங்கள் வழங்கி நெல்லையப்பர் திருக்கோவில் உள்தெப்பக்குளத்திற்கு வடக்கே கோசாலை இயங்கி வருகிறது. தினமும் காலை 6.30க்கு இங்கு கோபூஜை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று 10.8.2023 காலை தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை பிடியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் கோசாலையில் இருந்த சுமார் 13 பசுக்கள் , கன்றுகளை காணவில்லை. அவைகள் வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சுயஉதவிகுழுக்களுக்கு அந்த பசுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது சொந்தக் காசில் பசுக்களை வாங்கி சுயஉதவிகுழுக்களுக்கு தானம் செய்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால் சுவாமி நெல்லையப்பருக்கும் அன்னை காந்திமதிக்கும் அபிஷேகபாலுக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேண்டுதலாக கொடுத்த பசுக்களை , கன்றுகளை யார் யாருக்கோ தானம் கொடுப்பது மிகப்பெரிய பாவச் செயலாகும் நெல்லையப்பர் திருக்கோவிலில் பசுக்களை பராமரிப்பதற்கு என இரண்டு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. காலை முதல் இரவு வரை பசுக்களுக்கு அகத்திக்கீரை , பழங்கள் , காய்கறிகள் என பக்தர்கள் செழிப்பாக கோமாதாவிற்கு பக்தியோடு தானம் செய்து வருகின்றனர். பசுக்களுக்கு தீவனத்திற்கென நேரடியாக திருக்கோவில் செலவு செய்ததில்லை. இந்த நிலையில் பக்தர்கள் வேண்டுதலாக கொடுத்த பசுக்களை கன்றுகளை தானம் செய்த உள்நோக்கம் என்ன ? தானமாக கொடுத்த மாட்டை பல்லை பிடுங்கி பதம் பார்த்தானாம் என்ற பழமொழி உண்டு. அது போல தானமாக கொடுத்த பசுக்களை சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொடுத்தது மிகப்பெரிய பாவச் செயலென பக்தர்கள் கருதுகின்றனர். சுய உதவி குழுக்களிடம் கொடுக்கப்பட்ட பசுக்கள் எங்கு செல்கிறது யார் பராமரிக்கிறார்கள் அதிலிருந்து வருகிற வருமானத்தை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு ஏதாவது கைங்கரியம் செய்யப் போகிறார்களா தினமும் அபிஷேக பால் வழங்குவார்களா ? இந்த பசுக்கள் எல்லாம் நாளடைவில் இறைச்சிக்காக வெட்டப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதையெல்லாம் நெல்லை மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்த வேண்டும் நெல்லையப்பர் திருக்கோவிலில் இருந்து கபளீகரம் செய்யப்பட்ட மாடுகளை மீண்டும் வெள்ளையப்பர் திருக்கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும். பக்தர்கள் பசுக்களை கன்றுகளை தானம் செய்தது நெல்லையப்பர் கோவிலுக்கு தானே தவிர சுய உதவி குழுக்களுக்கு அல்ல என்பதை மாவட்ட ஆட்சியர் உணர வேண்டும் பசுக்களை மீண்டும் திருக்கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காவிட்டால் இந்து முன்னணி சார்பில் பக்தர்கள் திரட்டி அறப்போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.