கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் சொகுச பங்களாவை அமலாக்கத் துறை முடக்கியது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார். இவர் கரூர் – சேலம் புறவழிச்சாலையில் 2.49 ஏக்கர் பரப்பளவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அவருடைய மனைவி நிர்மலா பெயரில் இந்த வீடு கட்டப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கியதில் மோசடி செய்ததாகவும் இந்த வீட்டிற்கு தேவையான கட்டுமான பொருட்கள், கிரானைட் கற்கள் உள்ளிட்டவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த பிரம்மாண்டமான வீடு ரூ 300 கோடியில் கட்டப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேற்கண்ட புகாரின் பேரில் கடந்த மே மாதம் வருமான வரித் துறையினர் அசோக்குமாரின் வீட்டில் ரெய்டு நடத்தினர். அப்போது சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ரெய்டு குறித்து அப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த புதிய வீடு குறித்து விளக்கமளித்தார். அதாவது தனது தம்பியின் மனைவியின் தாய் அவருக்கு உள்ள காலி இடங்களை தங்கள் மகள்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்கும் வகையில் அந்த இடத்தை என் தம்பி மனைவிக்கு கொடுத்துள்ளார். அதில் அவர்கள் வீடு கட்டுகிறார்கள். அது என்னோட வீடு இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையின் கஸ்டடியில் இருக்கிறார். அவரிடம் இரு நாட்களாக ஒரு நாளைக்கு 50 கேள்வி என 100 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த நிலையில் இன்றைய தினம் கரூரில் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தி வருகிறது.
கரூர் புதிய சொகுசு பங்களாவின் ஆவணங்களுடன் ஆஜராகுங்கள்! செந்தில் பாலாஜியின் தம்பி மனைவிக்கு ED சம்மன்
இங்கு ரெய்டு நடக்கும் போது பெண் அதிகாரி உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் அசோக்குமாரின் ஆடிட்டர் வீட்டிற்கு சென்று சோதனை நிகழ்த்தினர். அங்கு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு ஆடிட்டர் வீட்டில் இல்லாததால் அவரை ஆஜராகுமாறு சம்மனை வீட்டில் ஒட்டியது. அது போல் அசோக்குமாரின் கரூர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவருடைய மனைவி நிர்மலா இல்லை.
அதனால் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் ஆஜராகுமாறு ஒட்டிவிட்டு வந்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் வீட்டை அமலாக்கத் துறை முடக்கியது. வீடு முடக்கப்பட்டது தொடர்பான நோட்டீஸை மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கொடுத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.