தமிழ் வருடக் கணக்கின்படி 12 மாதங்களில் நான்காவதாக வருகின்ற மாதம் ஆடி மாதமாகும்.
புவியியல் மற்றும் அறிவியல் அடிப்படையில் பார்க்கும் போது ஆடிமாதம் மழைக்காலத்திற்கு முன்பாக காற்று அதிகம் வீசும் ஒரே காலமாக இருக்கிறது.
இரண்டு பருவ நிலைக்கு நடுநிலையான மாதமாக ஆடி மாதம் வருவதால் மனிதர்களுக்கு சில வகையான நோய்கள் இந்த மாதத்தில் அதிகம் ஏற்படுகின்றன.
இதை போக்குவதற்காக தான் ஆடி மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவான கேழ்வரகு கூழ் தானமளிப்பதை விழாவாக அறிவியல் அடிப்படையில் நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர்.
அற்புதமான இந்த ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.
ஆடி மாதத்தில் வருகின்ற நான்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் தோறும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, முடித்து விட்டு தூய்மையான ஆடை அணிந்து கொண்டு, வீட்டின் பூஜையறையில் இருக்கின்ற அம்பாள் மற்றும் லட்சுமி படத்திற்கு வாசமுள்ள மலர்கள் சமர்ப்பித்து, மாதுளம் பழம் மற்றும் சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, விளக்கெண்ணெய் தீபமேற்றி, அம்பாளுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், லலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை உளமாற துதிக்க வேண்டும்.
அந்த வெள்ளிக்கிழமை தினம் முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது சிறப்பான பலன் தரும் என்றாலும் தற்காலத்தில் பெரும்பாலானோர் பணிக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால், அன்றைய தினம் உப்பு சேர்க்காத உணவு அல்லது பழம், பால் மட்டும் சாப்பிடுவதாலும் விரதம் இருந்த பலனை பெறலாம்.
பிறகு மாலை வேளையில் அருகில் உள்ள அம்பாள், லட்சுமி தாயார் போன்ற பெண் தெய்வங்களின் கோவிலுக்கு சென்று, அந்த தெய்வங்களுக்கு விளக்கெண்ணெய் அல்லது நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு கோயிலில் இருந்து வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று அம்பாளை வழிபட்ட பிறகு அந்த தெய்வத்திற்கு வைக்கப்பட்ட மாதுளம்பழம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை வீட்டில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து, நாமும் சிறிது சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகள் தோறும் மேற்கண்ட முறையில் அம்பாளுக்கு விரத வழிபாடு செய்ய வேண்டும்.
இத்தகைய ஆடி மாத வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பாள், லட்சுமி பெண் தெய்வங்களை வழிபடுபவர்களுக்கு கிரக தோஷங்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தை பீடித்திருக்கின்ற தரித்திர நிலை விரைவில் நீங்கும்.
கடன் பிரச்சனைகள் தீர்வதற்கான வழி உண்டாகும். நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும.
வீட்டில் திருமணம் ஆகாத நிலையில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
தகுந்த வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் எதிரிகள் தொல்லைகள் நீங்கி தன லாபங்கள் பெருகும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும்.
இந்த ஆடி வெள்ளிக்கிழமை விரதத்தை குறிப்பாக திருமணமான பெண்கள் மேற்கொள்வதால் அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாருக்கும் அனைத்து விதமான நன்மைகள் உண்டாகும்.