இஸ்லாமாபாத்: தோஷகானா முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்(70) பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் இம்ரான் கான் கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது வௌிநாட்டு தலைவர்கள் கொடுத்த நினைவு பரிசுகள், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பாகிஸ்தான் அரசு கருவூலமான தோஷகானாவிடம் சேர்க்காமல் குறைந்த விலைக்கு அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் நீதிமன்ற நீதிபதி ஹுமாயூன் திலாவர் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
மேலும் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். ரூ.1 லட்சத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்களுக்கு கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து இம்ரான் கான் உடனே கைது செய்யப்பட்டார். பஞ்சாப் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து இஸ்லாமாபாத் காவல்துறையினர் லாகூரில் உள்ள இம்ரான்கானின் அதிகாரப்பூர்வ இல்லமான ஜமான் பார்க் இல்லத்திற்கு சென்று அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் தகவல் அமைச்சர் அமீர் மிர் கூறுகையில்,’ இம்ரான்கானை இஸ்லாமாபாத்துக்கு போலீசார் அழைத்துச் செல்கின்றனர். அவர் ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்’ என்று தெரிவித்தார். இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சிறப்பு உதவியாளர் அத்தாவுல்லா தரார் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘இம்ரான்கான் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது வேறு எங்காவது அடைக்கப்படுவாரா என்பது பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தார். தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இம்ரான் கானின் எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.
மேலும் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. மிக விரைவில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதும், அடுத்த 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாததும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் கட்டிடங்களில் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லாகூர், பஞ்சாபில் இதுவரை எந்த ஒரு பெரிய போராட்டமும் நடத்தப்படவில்லை.ஆனாலும் மே9ம் தேதி முதல்முறை இம்ரான் கைது செய்யப்பட்ட போது நடந்த தாக்குதல் போல் இப்போதும் தாக்குதல் நடப்பதை தடுக்க ராணுவ நிலைகளை பாதுகாப்பதற்காக கூடுதல் வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இம்ரான்கான் மீது குற்றச்சாட்டு என்ன?
இம்ரான்கான் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்த போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணத்தில் பெறப்பட்ட பரிசுகளை அரசு உடைமையாக ஒப்படைக்காமல் அதை விற்று ரூ.5.50 கோடி சம்பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் ரூ.3 கோடி மதிப்பில் 7 கைக் கடிகாரங்களை வாங்கினார். அதில் ஐந்து ரோலக்ஸ் மற்றும் ஒரு கிராப் இடம் பெற்றுள்ளது. இந்த தகவலை அறிந்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி தவறான தகவல் அளித்ததாக கூறி பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கானை தகுதி நீக்கம் செய்தது. மேலும் பாகிஸ்தான் நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகள் நடந்து வருகிறது.
- நீதிபதி கடும் அதிருப்தி
இம்ரான்கான் மீதான தோஷகானா ஊழல் வழக்கு நேற்று காலை 8.30 மணிக்கு இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த வழக்கில் இம்ரான்கான் நேரில் ஆஜராகவில்லை. மேலும் அவரது சார்பில் வக்கீல்களும் ஆஜராகவில்லை. இதை அறிந்த நீதிபதி ஹூமாயூன் திலாவர் பலமுறை அதிருப்தி தெரிவித்தார். மேலும் இம்ரான்கானை நேரில் ஆஜராக வலியுறுத்தி அவரது பாதுகாப்பு ஆலோசகருக்கு பல வாய்ப்புகளை அவர் வழங்கினார். இதற்காக நண்பகலில் தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்பு நீதிமன்றம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் இம்ரான்கான் அல்லது அவரது சார்பில் மூத்த வக்கீல் ஆஜராகாததால் தண்டனை அறிவிப்பு வெளியிடப்பட்டு, உடனடியாக இம்ரான்கானை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
- தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணம் தாக்கல்
நீதிபதி ஹூமாயூன் திலாவர் அளித்த தீர்ப்பு விவரம்: பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) தலைவர் இம்ரான்கான் மீது தவறான சொத்து விவரக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் இம்ரான் கான் வேண்டுமென்றே தோஷகானா பரிசுகள் தொடர்பாக போலியான விவரங்களை சமர்ப்பித்துள்ளார். மேலும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இம்ரான்கானுக்கு தேர்தல் சட்டப்பிரிவு 174ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக, அந்த உத்தரவின் நகலை இஸ்லாமாபாத் காவல்துறைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். கைது வாரண்ட்களை உடனடியாக அமல்படுத்துவதை உறுதி செய்ய இஸ்லாமாபாத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீசுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். - அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத்தில் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரான்கான் முதன்முறையாக மே 9 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.
- தற்போது 2வது முறையாக தோஷகானா வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த 3 மாதங்களில் இம்ரான்கான் கைது செய்யப்படுவது இது 2வது முறை ஆகும்
தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு இம்ரான் வீட்டிற்கு போலீஸ் வந்தது எப்படி?
இம்ரான்கான் கட்சியின் துணைத் தலைவர் குரேஷி கூறுகையில்,’ நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் நிராகரிக்கிறேன். இது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பு என்று நம்புகிறேன். நாங்கள் இம்ரான் கானை அனைத்து சட்ட வழிகளிலும் பாதுகாப்போம். கட்சியின் முக்கியக் குழு தனது அடுத்த நடவடிக்கையை வெளியிடும். இம்ரான்கான் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகும் போது, இம்ரான் கானை அழைத்துச் செல்வதற்காக, அவரது வீட்டிற்கு போலீசார் வந்தனர். இது கவலையளிக்கிறது. அப்படியானால் தீர்ப்பு குறித்து போலீசாருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதா?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.
- வீட்டில் அமைதியாக இருக்க வேண்டாம்
டிவிட்டரில் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில் இம்ரான்கான் கூறுகையில்,’இந்த வீடியோ செய்தி உங்களை வந்தடையும் நேரத்தில், நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவேன். அதனால்தான் ஒரு வேண்டுகோள்.. நீங்கள் அனைவரும் வீட்டில் அமைதியாக உட்கார வேண்டாம். என்னுடைய இந்த தீவிர முயற்சிகள் எனக்காக அல்ல, என் மக்களுக்காக, என் சமூகத்திற்காக, உங்களுக்காக, நான் உங்களுக்காக செய்கிறேன், உங்கள் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக செய்கிறேன். உங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக நீங்கள் போராட வேண்டும். எனது கைது லண்டன் திட்டத்தை (பிஎம்எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப்) நிறைவேற்றுவதில் ஒரு படியாகும். எனது கட்சித் தொண்டர்கள் அமைதியாகவும், உறுதியுடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நாங்கள் தலைவணங்குவதில்லை.’ என்று அந்த டிவீட்டில் தெரிவித்துள்ளார் - துப்பாக்கி முனையில் இம்ரான்கான் கடத்தப்பட்டார்
இம்ரான் கான் பஞ்சாப் காவல்துறையினரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாகக் கூறி லாகூர் உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது. இம்ரான்கான் சார்பில் அவரது கட்சியின் கூடுதல் பொதுச்செயலாளர் உமைர் நியாசி இந்த மனுவை தாக்கல் செய்தார். அப்போது மனுவை தாமதமின்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதுபற்றி உமைர் நியாசி தனது மனுவில்,’ பாகிஸ்தான் அரசு இம்ரான்கானை சட்டவிரோத காவலில் வைத்துள்ளது. இம்ரான் கான் இன்று(நேற்று) மதியம் 12.45 மணியளவில் அவரது ஜமான் பார்க் இல்லத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது சுமார் 200 போலீசார் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் அவரை கடத்திச் சென்றனர். அவரை சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். எனவே எனது மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இம்ரான்கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையில், லாகூர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், இம்ரான்கானின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தது, ‘இது நீதியின் படுகொலை. நியாயமான விசாரணை தொடர்பான சட்டத்தை மீறுவதாகும்’ என்று தெரிவித்து உள்ளது