இந்த மாதம் வங்கிகளுக்கு இரண்டு முறை தொடர் விடுமுறை வருவதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக., 12 முதல், 15 வரையும், 25 முதல் 27ம் தேதிவரையும், வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
ஆக., 12 இரண்டாவது சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இது, வழக்கமான விடுமுறை தான். 14ம் தேதி திங்கள்கிழமை வங்கி செயல்படும்.
ஆனால், 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என தவறாக குறிப்பிட்டு, வங்கி செயல்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆக., 26ம் தேதி நான்காவது சனிக்கிழமை, 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை.
இதுவும் வழக்கமான விடுமுறை தான். ஆனால், ஆக., 25 வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி என குறிப்பிட்டு விடுமுறை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி செப். 6ம் தேதியும், விநாயகர் சதுர்த்தி, செப்., 18ம் தேதியும் வருகின்றன. எனவே, சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவலை நம்ப வேண்டாம்.