பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் 4வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர் ஷகிலா முன்னிலை வகித்தார்.
இதில் 4வது மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் பேசுகையில், தாம்பரம் காந்தி சாலை – முத்துரங்க முதலி சாலை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது எனவே அங்கு வேகத்தடை அமைத்துத் தர வேண்டும்.
தாம்பரம் விஏஓ அலுவலகத்தில் பொதுக்கழிப்பிடம் அமைத்து தர வேண்டும்.
50வது வார்டில் உள்ள சிமெண்ட் சாலைகளை, தார் சாலைகளை மாற்றியமைக்க வேண்டும்.
அனைத்து தெரு விளக்குகளையும் எல்.இ.டி விளக்காக மாற்றி அமைத்து தரவேண்டும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆர்.ஓ வாட்டர் அமைத்து தர வேண்டும்.
50வது வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதேபோல கூட்டத்தில் பூங்கா பராமரிப்பு, பொதுக் கழிவறைகள் சீரமைத்தல், குடிநீர் வினியோகம், சாலை சீரமைத்தல், கொசு தொல்லைகளுக்கு தீர்வு, கால்வாய்கள் சீரமைப்பு என பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பொது கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அமைக்க, குடிநீர் குழாய் பதிக்க, திடக்கழிவு அகற்ற பயன்படுத்தப்படும் வாகனங்கள் பழுது சரி பார்க்க, தெரு நாய்கள் பிடித்து அறுவை சிகிச்சை செய்யும் பணி, கொசு ஒழிப்பு திட்டத்திற்கு தேவையான மருந்துகள் பெற, மழைநீர் வடிகால்வாய்கள் சீரமைக்க, பூங்காக்கள் சீரமைக்க என ரூபாய் 3 கோடியே 64 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் 20 தீர்மானங்களுக்கு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது.