லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் லஞ்சம் பெற்றதாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேனி மாவட்ட இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அதிகாரி நேரில் சென்று உணவக உரிமையாளரிடம், ஊடகத்தில் வெளியான செய்தி உண்மைதானா என்று விசாரணை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு இருந்தார். விசாரணையின் அடிப்படையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரியவந்த காரணத்தினால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.