மதுரை: நியோமேக்ஸ் நிறுவனத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், 62 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். டெபாசிட்தாரர்களை புகார் அளிக்க கூடாது என மிரட்டுவதால் இயக்குநர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகரான வீரசக்தி உள்ளிட்டோர் செயல்பட்டனர். இந்நிறுவனத்தின் கீழ் கர்லாண்டோ பிராபர்டீஸ் (பி) லிமிடெட் உள்ளிட்ட பல கிளைகள் செயல்பட்டன. இவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாக தரப்படும் எனக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு அதிகமாகவும் முதலீடு செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
புகாரின்பேரில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்ட 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவன இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், கமலக்கண்ணன் மற்றும் இதன் துணை நிறுவனங்களின் இயக்குனர்கள் பழனிசாமி, அசோக் மேத்தா பன்சால், சார்லஸ், தியாகராஜன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள், மற்றொரு பாலசுப்ரமணியன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மீண்டும் மனு செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரவி ஆகியோர் ஆஜராகி, ‘‘வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் தான் உள்ளது. இயக்குநர்கள் பலரும் தலைமறைவாக உள்ளனர். 20 நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்ட 62 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 20 நிறுவனங்கள் மூலம் 106 கம்பெனிகளுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வழக்குப்பதிவு செய்து ஒரு மாதம் தான் ஆகிறது.
இதுவரை 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 152 பேர் புகார் அளித்துள்ளனர். இவர்களிடம் மட்டும் ரூ.26 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல பெயர்களில் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இதனால், புகார்தாரர்கள் வருவதில் சிரமம் உள்ளது. நீதிபதி கமிட்டி அமைக்க வேண்டுமென்ற நிறுவனத்தினரின் வாதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. போலீசாரிடமே முழுமையான விபரங்களை அளித்தால் சுலபமாக தீர்வு காண முடியும். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் எவ்வளவு பேர், எவ்வளவு பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்பது தெரியவரும்.
முதலீட்டாளர்களை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ளும் நிறுவனத்தினர் போலீசில் புகார் அளிக்க வேண்டாம். புகார் அளிப்பவர்களுக்கு பணம் வழங்க முடியாது எனக்கூறி மிரட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலானோர் புகார் அளிக்க தயங்குகின்றனர். சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து ஆவணங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகிவிடுவர். இதனால் விசாரணை முழுமையாக பாதிக்கும். எனவே, முன்ஜாமீனோ, இடைக்கால நிவாரணமோ வழங்கக் கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தனர். நியோமேக்ஸ் தரப்பில், இடையீட்டு மனுதாரர்களுக்காக ரூ.10 கோடியோ, இதற்கேற்ப நிலத்தையோ டெபாசிட் செய்ய தயாராக உள்ளோம்.
நீதிபதி தலைமையில் குழு அமைத்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இடைக்கால ஜாமீன் வழங்கினால் இதற்கான பணிகளை சுலபமாக மேற்கொள்ள முடியும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். நியோமேக்ஸ் தரப்பில் தங்களது நிறுவனங்களில் முதலீடு செய்த டெபாசிட் தாரர்கள் மற்றும் முதலீடு தொடர்பான விபரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஆக.4க்கு தள்ளி வைத்தார்.